உறங்கும் முன் - 24

யார் அந்தக் குரங்கு?

அஹிமா, லஹிமா, ஓரிடத்தில் மறைந்து மற்றோரிடத்தில் தோன்றுவது, ஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றுவது  முதலான சித்திகள் எல்லாம் பகவானுக்கு ஸ்வயமே உள்ள ஐச்வர்யம். அவற்றைப் பயன்படுத்தி அசுரர்களை அழிப்பதோடல்லாமல், வெண்ணெய்த் திருட்டுக்கும் அந்த சித்திகளைப் பயன்படுத்தினான் பகவான். 

எங்கே சென்றாலும் ஒரு குரங்கு தொடர்ந்து வந்துவிடும். 
திருடும் வெண்ணெயைத் தனியாக உண்பது கண்ணனுக்கு அறவே பிடிக்காத விஷயம். தன்னோடு பங்கேற்கும் குழந்தைகளுக்கும்  வெண்ணெயில் பங்கு கொடுப்பான். கூடத் தொடர்ந்து வரும் குரங்குக்கும் ஒரு பங்கு நிச்சயம் உண்டு. ராதைக்கென்று கொஞ்சம் எடுத்து யாருக்கும் தெரியாமல் ஒளித்துவேறு வைத்துக் கொள்வானாம்.

எல்லாம் சாப்பிட்ட பிறகு, கை அலம்பும் வழக்கமெல்லாம் கிடையாது. கையைக் குரங்கின் மேல் துடைத்துவிடுவான். அதுவும் சுகமாகக் காட்டும்.

இப்படிக் கண்ணனைத் தொடர்ந்து வரும் குரங்கு யாராய் இருக்கும்?

நமது ஹனுமார்தான். சென்ற அவதாரமான ராமாவதாரத்தில் ராமனையும் சீதையையும் சேர்த்து வைத்தார்.

இந்த அவதாரத்தில்  பகவான்  இவ்வளவு லீலைகள் செய்யும்போது வராமல் எப்படி இருப்பார்?

ஹனுமானும் குழந்தைப் பருவத்தில் நிறைய விஷமங்கள் செய்து, பிறகு சாபத்தினால் ஜாம்பவான் வந்து நினைவூட்டும் வரை தனது பராக்ரமத்தை மறந்திருந்த கதை அனைவரும் அறிந்ததுதானே!

இப்போது அடுத்த அவதாரத்தில் வெண்ணெய்க் களவிலும் தன் பங்கை ஆற்ற வந்துவிட்டார் போலும். சில சமயம் திருடப்போகும் வீட்டில் கோபி இருக்கிறாளா இல்லையா என்று துப்புக் கொடுப்பார்.

கண்ணன் தினமும் அவர் மீது தன் வெண்ணெய்க் ‌கையைத் துடைத்ததால்தான் அதை அவருக்கு நினைவு படுத்தினால் மகிழ்ந்து நமக்கும் அருள்வார் என்று நாமும் ஹனுமானுக்கு வெண்ணெய்க் காப்பு சாற்றுகிறோம்.

மெதுவாகக் கண்ணனிடம் பேச்சுக் கொடுத்த யசோதா கேட்டாள்.
ஏண்டா கண்ணா, வெண்ணெயை பசங்களுக்கெல்லாம் கொடுத்தியா?

ஆமாம்மா. நீதானே சொல்வ, தனியா சாப்பிடக்கூடாது. கூட இருக்கறவங்களுக்கெல்லாம் கொடுத்துட்டு சாப்பிடணும்.இல்லாட்டா வயத்த வலிக்கும்னு.

அது சரிடா. குரங்குக்கும் குடுக்கறியாமே. குரங்குக்கு வாழைப்பழம் கொடு. வெண்ணெய் எதுக்கு என்றாள்.

சொன்னானே பார்க்கவேண்டும் கண்ணன் ஒரு பதிலை. 
அம்மா இந்த மனுஷங்களுக்கும் குரங்குக்கும் எனக்கு வித்தியாசமே தெரியலம்மா. நான் என்ன செய்யறது?  அதனாலத்தான் எல்லாருக்கும் குடுக்கறேம்மா..
யசோதை பதில் சொல்ல முடியாமல் விழித்தாள்.

நவரஸங்களுடன் கண்ணன் வெண்ணெய் திருடுவதை மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி பின்வருமாறு அனுபவிக்கிறார்.

ராகம் : ஸங்கராபரணம்
தாளம் : ஆதி

பல்லவி
நவநீத நாட்யம் செய்கின்றான் கண்ணன்
நட்டுவாங்கம் செய்ய யார் வாரீர் (ந)

அனுபல்லவி
நவநீதம் நவநீதம் என்றே வாய் பாடும்
வெண்ணெய் இருக்கும் இடத்தையே கண்கள் தேடும்
பானைகளைப் பார்த்து பாதங்கள் ஆலாய் பறக்கும் (ந)

சரணம்
பானையிலே வெண்ணெய் இல்லாவிட்டால் சோகம்
வெண்ணெய் இருக்கும் இடத்தைக் கண்டு விட்டால் காம்பீர்யம்
வெண்ணெயைக் கையில் எடுத்து விட்டால் ஆனந்தம்
மாமி வரும் சப்தம் கேட்டால் பயம்
அள்ளிக் கொடுக்கும்போது வாத்ஸல்யம்
மந்திக்கும் பங்கிடும் போது ஹாஸ்யம்
நாற்றம் எடுக்கும் வெண்ணெயைக் கண்டாலோ ரௌத்ரம்
ராதைக்கென்று தனியே ஒளித்து வைத்தால் ச்ருங்காரம்
இத்தனையும் செய்து விட்டு யசோதை முன் சாந்தம்
(ந)

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37