உறங்கும் முன் - 23

கையும் களவுமாகக் கண்ணனைப் பிடித்தாலும்  கூட அவன் தான் வெண்னெய்த் திருடன் என்று நிரூபிக்க முடியவில்லை. என்ன செய்யலாம் என்று தலையைப் பிய்த்துக் கொண்டார்கள் கோபிகள். ஒவ்வொருவராய் ஏமாற்றியது போதாதென்று அனைவரையும் ஒரு சேர ஏமாற்றிவிட்டான். இனிமேல் அவனைப் பற்றிச் சொல்லும் இந்தப் புகாரையும் யசோதை காது கொடுத்துக் கூட கேட்கமாட்டாள். பேசாமல் கண்ணனோடு சமாதானம் செய்துக்கொள்ளலாம் என்று எல்லா கோபிகளும் சேர்ந்து ஒரு மனதாக முடிவெடுத்தனர். இவர்களது சமாதானம் அந்தக் கள்ளனிடம் செல்லுபடியாகுமா?

ஆவி வந்த பானை

எங்கு ஒளித்தாலும், எப்படி ஒளித்தாலும் வெண்ணெய்க் களவு நடந்துவிடுகிறது. 

ஒரு கோபி பானையை உறியில் வைத்து அதோடு சேர்த்து மணியைக் கட்டி வைத்திருந்தாள். உறி ஆடினால், மணி அடிக்கும், கண்ணனைப் பிடித்து விடலாம் என்பது அவள் கணிப்பு. கண்ணனும் வந்தான், முதலில் மணியைத்தான் பார்த்தான். உறியை இழுத்தால், மணிச் சத்தம் கேட்டு தூங்கும் கோபி விழித்துக்கொள்வாளே என்றெண்ணிய கண்ணன், மணிக்கு உத்தரவிட்டான். நான் ஆட்டினால் அடிக்கக்கூடாதென்று. மணியும் ஒப்புக்கொண்டது. 
உறி மீது ஏறினான். எவ்வளவு ஆட்டினாலும் மணி அடிக்கவில்லை. ஒரே சந்தோஷம். பானைகளைக் கீழே இறக்கிவிட்டான். ஒரு உருண்டை வெண்ணெயை எடுத்து வாயில் போடும் தருணம், அதுவரை பேசாமல் இருந்த மணி டங்க் டங்க்கென்று அடிக்க ஆரம்பித்தது.
மணியைப் பார்த்துக் கண்ணன் கோபத்துடன்  மிரட்டினான், ஏன் அடிச்ச? உன்ன அடிக்கக்கூடாதுன்னு சொன்னேன், சரின்னு சொன்னியே 

என்றான்.
மணி சொன்னது,

உண்மைதான். நீ உறியை இழுக்கும்போது அதனால்தான் அடிக்கல என்றது.

இப்ப சாபிடும்போது ஏன் அடிச்ச?

நீ இறைவன் ஆச்சே. எப்போதும் உனக்கு நெய்வேத்யம் செய்யும்போது என்னை அடித்துப் பழக்கம். அதனால் நீ சாப்பிடறபோது என்னையறியாமல் என் சுபாவத்தால் அடிச்சுட்டேன். மன்னிச்சுக்கோ கண்ணா
என்றது.

மணி சத்தத்தில் கோபி எழுந்து வந்தபோது, உடைந்த பானைகள்தான் மிச்சம்.

இதைக் கேள்விப்பட்டிருந்த யசோதை கண்ணனைத் தூங்க வைக்கும்போது, முதுகைத் தடவிக் கொண்டே, மெதுவாகக் கேட்டாள்.

வெண்ணெயை எடுத்துண்ட சரி, கண்ணா , பானையை ஏன் உடைச்ச?

அம்மா, அந்தப் பானை ஒரே நாத்தம். ஆவி வந்த பானைன்னு பரம்பரையா அதிலயே வெண்ணெய் வெக்கறா. உடைச்சாத்தான் புதுப் பானை வெப்பாம்மா. அதனாலதான்  உடைச்சுட்டேன் என்று தூக்கக் கலக்கத்தில் உண்மையைச் சொன்னான்  கள்ளக் கண்ணன்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37