உறங்கும் முன் - 22

கண்ணன் வெண்ணெய் திருடும்போது கையும் களவுமாகப் பிடிப்பதா? நேற்று யசோதை சொன்னாளாமே? நடக்கிற காரியமா? எப்போதும் பாலும், தயிரும், வெண்ணெயும் திருடு போன பின்னர் உடைந்த பணிகளும், காலி பணிகளும் உருண்டு கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறார்களேயன்றி, ஒரு நாளும் களவு செய்யும் கண்ணனைக் கண்டதேயில்லை கோபிகள் எல்லாரும்.

இது போக ஊருக்கு வழி. நல்ல அம்மா, நல்ல பிள்ளை. இருவரும் ஒருவருக்கொருவர் ஏர்வைதான் என்று பேசிக் கொண்டனர்.

மாயக் கண்ணன்

இரண்டாம் ஜாமத்தில் டடக் டடக் என்று சத்தம் கேட்டது.சத்தம் கேட்டு விழித்துக்கொண்ட கோபி, அரைத்தூக்கத்தில் கண்ணைக் கசக்கிகொண்டு மெதுவாக எழுந்து வந்தாள்.அவளுக்குத் தான் பார்ப்பது நிஜமா, கனவா, ஒன்றும் புரியவில்லை. கண்ணைக் கசக்கிக் கொண்டாள். கிள்ளிப் பார்த்துக் கொண்டாள். ஓசைப்படாமல் சென்று கணவனை எழுப்பி அழைத்து வந்தாள்.

அங்கே..
நீலநிற ஜோதி, குட்டிக் கண்ணன், வெண்ணெய்ப் பானையை உருட்டிக்கொண்டு அங்குமிங்கும் பார்த்துக் கொண்டு உட்கார்ந்துகொண்டு, வாய்க்குள் விரலை விட்டு வெண்ணெயை நக்கிக் கொண்டிருந்தது.

பூனைபோலச் சென்று லபக்கென்று கண்ணன் கையைப் பிடித்தாள். திடிரெனப் பிடிபட்டதும், கண்ணன் விடுவித்துக் கொள்ள எத்தனித்தான். கெட்டியாக அவனைப் பிடித்துக் கொண்டாள்.

அடேய் பயலே, நீ இன்னிக்கு மாட்டினியா? என்னவோ, உங்கம்மா பெரிசா சொன்னா, உன்னைக் கையும் களவுமா பிடிச்சுண்டு வரச்சொல்லி. சொன்ன அன்னிக்கே அகப்பட்டியே. உன்னை யசோதாகிட்ட மாட்டிவிட்டுட்டுத்தான் மறுவேலை. இப்ப என்ன சொல்றா பாக்கலாம்.

திருதிருவென்று விழித்துக் கொண்டு, 

என்ன விட்டுடுங்க மாமீ என்று கெஞ்சிக் கொண்டிருந்தது நமது கருவண்டு. விடிய விடியத் தூங்காமல் கண்ணனைக் கையில் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். சற்று கண்ணயர்ந்தாலும் அவன் ஓடிவிடுவானே.

பொழுது விடிய சிறிது நேரம் முன்னரே, கண்ணனை ஒரு கையில் பிடித்துக் கொண்டு யசோதை வீட்டை நோக்கி நடந்தாள்.

இன்னும் சில கோபிகளும் யசோதை வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார்கள். என்ன விஷயமாக இருக்கும்?  என்னவென்று பேச்சுக் கொடுத்தால் கண்ணன் ஏமாற்றிவிட்டு ஓடிவிடுவானே. அவளை பிறகு விசாரிப்போம்.
என்று நடந்தாள்.

யசோதை வீட்டிற்குச் சென்றால், அங்கே ஊரிலுள்ள அத்தனை கோபிகளும் வந்திருந்தனர்.

யசோதே யசோதே எல்லாரும் ஒரு சேரக் கூப்பிட்டனர். அவ்வளவு குரல்களைக் கேட்டதும் யசோதை மிரண்டுபோனாள்.

என்னாச்சு இவங்க எல்லாருக்கும்?
நேத்து நல்லாதானே இருந்தாங்க? ஏதாவது ஆபத்தா?

எல்லாரும் கையை இப்படி சுளுக்கு வந்ததுபோல் நீட்டிக்கொண்டிருந்தார்கள்
யசோதை சுளுக்குக்கு மந்திரிப்பாள்.

எல்லாருக்கும் சுளுக்கா?
இவ்வளவு பேருக்கு சுளுக்கு மந்திரித்தால் எனக்கு சுளுக்கு வந்துட்டா என்ன செய்யறது?
யோசித்துக் கொண்டே வெளியே வந்தாள்.

யசோதே! என்னமோ கையோட பிடிச்சுண்டு வரச் சொன்னியே. இதோ பார் கண்ணன். என் வீட்டில் வெண்ணெய் திருடறச்சே பிடிச்சுண்டு வந்தேன் 
என்றாள் ஒருத்தி.

இன்னொரு கோபி, என் கைலதான் க்ருஷ்ணன்.

என் கைல க்ருஷ்ணன் என்று எல்லா கோபிகளும் சத்தம் போட்டனர்.

அவரவர்களுக்கு அவரவர் கையில் உள்ள க்ருஷ்ணன் மட்டுமே தெரிந்தான். மற்றவர் கையிலுள்ள க்ருஷ்ணன் தெரியவில்லை.
யசோதைக்கோ, யார் கையிலுள்ளதும் தெரியவில்லை. 

சுளூக்கில்ல யசோதே. கண்ணன் பார் என,

யசோதை

 காலைலேர்ந்து என்னாச்சு உஙளுக்கெல்லாம். கண்ணன்னு சொல்லிண்டு இங்க வந்திருக்கீங்க்.குழந்தை உள்ள தூங்கறானே. 

என்றவள்,‌ உள்ளே திரும்பி க்ருஷ்ணா என்று கூப்பிட, உள்ளேயிருந்து‌ கண்ணைக்‌ கசக்கிக்கொண்டு 

கூப்பிட்டயாம்மா‌
 
என்று‌கேட்டுக்கொண்டு கண்ணன்‌ வந்தானோ இல்லையோ,‌ கோபிகள் கையிலிருந்த  அத்தனை‌ க்ருஷ்ணனும்‌ பட்டென்று‌ மறைய, அத்தனை கோபிகளும்‌ மயங்கி விழுந்தனர்.

கோகுலத்திலுள்ள அத்தனை வீடுகளிலும் ஒரே சமயத்தில் வெண்ணெய் திருடி, பிடிபட்டு, மறைந்த கண்ணனை த்யானம் செய்யச் செய்ய நம்மீதுள்ள  மாயை விலகுமன்றோ?

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37