உறங்கும் முன் - 21

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோபியும் புதிது புதிதாகச் சொல்லும் புகார்களைக் கேட்டுக் கேட்டு யசோதை ஒரு பக்கம், நல்ல சாமர்த்தியம் தான் இந்தப் பிள்ளை. நேத்து கூட எங்கயோ போய் மடி நிறைய முறுக்கு, சீடை எல்லாம் கட்டிக் கொண்டு வந்ததே, என்று மகிழ்ந்தாலும், இவ்வளவு சிறு வயதில் இப்படி ஊரை ஏய்த்து உலையில் போடுகிறான். இன்னும் பெரியவனானால் என்ன செய்வானோ என்று கவலைப் பட்டால். இருந்தாலும், புகார் சொல்லும் எந்த கோபியிடமும் கண்ணனை வீட்டுக் கொடுக்காமல் அவள் சமாளிக்கும் சாமர்த்தியம் இருக்கிறதே? அது கண்ணன் வெண்ணெய் திருடும் சாமர்த்தியத்தை விடப் பெரியது. இன்றைய புகார் என்னவோ?

பாரம் குறைந்தது

கோபியர் அனைவரும் பால், தயிர், வெண்ணெய் இவற்றை விற்கச் செல்லும்போது, எல்லோரும் ஓரிடத்தில் சேர்ந்துகொண்டு பிறகு செல்வார்கள். கடிகாரம் கிடையாது. விடிவெள்ளியும் மேகம் வந்தால் தெரியாது. எனவே சேவல் கூவுவதுதான் அவர்களை எழுப்பும் ஒலி.

இன்று இரண்டாம் ஜாமத்திலேயே ஒரு கோபியின் வீட்டில் சென்று சேவல்போலக் கூவிவிட்டான்.
அவள் பொழுது புலரும் நேரமாயிற்று என்று விடுவிடென வேலைகளை முடித்து விட்டு பால் பானையைத் தலையில் வைத்துக்கொண்டு  கிளம்பினாள்.

அவள் சிறிது தூரம் சென்றதும் பின்னால் சென்றான் நந்தபாலன்.

மாமீ மாமீ

யாரு கண்ணனா?
தலையில் பானை இருந்ததால் சட்டென்று திரும்பாமல் கேட்டாள்.

ஆமா மாமீ. தனியா போறீங்க. யாரும் கூட வரலியா?

யமுனைக் கரைக்குப் போனால் எல்லாரும் வருவாங்க. சேர்ந்து போவோம் கண்ணா.

நீங்க ரொம்ப பாவம் மாமீ, போன மாசம் பாத்ததுக்கு ரொம்ப இளைச்சுப் போயிருக்கீங்க. உங்களுக்கு ஏதாவது கஷ்டமா?

அத விடு கண்ணா..

சொல்லுங்க மாமீ. யார் கிட்டயாவது சொன்னா பாரம் குறையும்.

நீ ரொம்ப சின்ன பையன்டா. உன்கிட்டபோய் என்னத்த சொல்றது?

மாமீ என்கிட்டதான் சொல்லணும் நீங்க. நான் யார் கிட்டயும் சொல்லவே மாட்டேன். வேற யார்கிட்டயாவது சொன்னா அது காது மாறி காது மாறி உங்க மாமியார் காதுக்கு போயிடும்.

அதற்குள் மற்ற கோபிகளும் வந்துவிட சேர்ந்து நடக்கத் துவங்கினர். 

அதில்ல கண்ணா. எல்லா வேலையும் நானே பாக்க வேண்டியிருக்கு. எவ்ளோ செஞ்சாலும் நல்ல பேர் இல்ல. நாத்தனாரும் மாமியாரும் ஒரு துரும்பெடுத்துப் போடறதில்ல. கல்யாணம் பண்ணிட்டு வந்த நாள்ளேர்ந்து ஒரு சுகமும் இல்ல.

மாமீ அவங்க எல்லாம் அப்டித்தான். கல்யாணத்துக்கு முன்னாடியே உங்க அப்பா என்கிட்ட கேட்டிருந்தா நான் அந்த வீட்டில் பொண்ணக் குடுக்காதீங்கன்னு சொல்லியிருப்பேன். போனாப் போறது மாமீ. எல்லாம் சரியாயிடும்.

ஏதோ என் கஷ்டத்த உன்கிட்ட சொன்னதில கொஞ்சம் பாரம் கொறஞ்ச மாதிரி இருக்கு...
மற்ற கோபிகள் சொன்னார்கள், உன் மனசில மட்டும் இல்லடி எங்க தலையிலயும் பாரம் கொறஞ்ச மாதிரி இருக்கு.

பானையை எடுத்துப் பார்த்தால், எல்லாப் பானைகளிலும் ஓட்டை. பால், தயிர் ஒன்றும் காணவில்லை.

கண்ணன் கூட்டாளிகளோடு பின்னாலேயே பேசிக்கொண்டு வந்து பானைகளில் ஓட்டை போட்டு எல்லாம் குடித்து விட்டுப் போய் விட்டிருந்தான்.

எல்லாரும் ஓட்டைப் பானையோடு வந்து யசோதையிடம் காண்பித்தார்கள்.
யசோதை பார்த்தாள்.
இனி இதெல்லாம் செல்லுபடியாகாது. இனிமே யாராவது வெண்ணெய் போச்சு, தயிர் போச்சு னு புகார் சொல்றதா இருந்தா, அவன் திருடும்போது கையும் களவுமா பிடிச்சுக் கொண்டு வந்தாதான் பேச்சு. இல்லாட்டா என்கிட்ட வரக்கூடாது
என்று சொல்லிவிட்டாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37