உறங்கும் முன் - 17

நந்தபாலனின் கதையமுதம் அனைவரையும் சுண்டி இழுக்க, அவனோ அம்மா கதை சொல், அம்மா கதை சொல், என்று தினமும் உறங்கும் முன் யஶோதைடம் கதை கேட்பான்.

கதை கேட்கும் கண்ணன் கதை

எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிட என்று பெரியாழ்வார் அனுபவித்தபடி கோகுலம் முழுதும் நந்தன் பிள்ளையின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
அவர்களிடம் மிதமிஞ்சியிருந்த செல்வமான பசுவின் வெண்ணெய், தயிர், பால் போன்றவற்றை ஒருவர் மீது ஒருவர் அடித்துக்கொண்டு,

ஜெய் ஜெய் கோபால!
ஜெய் ஜெய் கோவிந்த! 

என்று கோஷமிட்டார்கள். இன்றும்கூட ஒருசில இடங்களில் நந்தோத்ஸவம் கொண்டாடும்போது, ஒருவர் மீது ஒருவர் அடிப்பதற்காக வைத்திருக்கும் பால், தயிர்ப் பானைகளில் கொஞ்சம் எண்ணெயை ஊற்றிவிடுவர். பால் தயிர், வெண்ணெய், மஞ்சள் இவற்றால் அடிக்கும்போது ஏற்படும் கறை துவைத்தால் போய்விடும். எண்ணெயை ஊற்றி அடித்தால் அது கொண்டாட்டங்கள் முடிவதற்குள் துணியில் நன்கு பிடித்துகொள்ளும். அதன் பின் வருடம் முழுவதும், எப்போது அந்த உடையைப் பார்த்தாலும், அதன் தொடர்பாக நந்தோத்ஸவமும், கண்ணன் அடித்த லூட்டிகளும் நினைவில் வருமாம்.

கொண்டாட்டங்கள் முடிந்து அனைவரும் கிளம்பிய பின்னர், பசுவின் குளம்படி மண் கொண்டு யசோதா கண்ணனுக்கு த்ருஷ்டி சுற்றிப்போட்டாள். 
உண்ட பின்னர் உறங்கும் சமயம் பிடித்துக் கொண்டான் அம்மா கதை சொல் என்று.

கண்ணா மிகவும் களைச்சு போயிருப்பாய். இப்ப தூங்கு. நாளைக்கு சொல்றேன்.

அதெல்லாமில்ல. நீ எப்ப ராமாயணக் கதை சொன்னாலும் ராமர் கல்யாணத்தோட முடிச்சுடற. அதுக்கப்றம் என்னாச்சு சொல்லு.

குழந்தைக்கெதற்கு காட்டுக்குச் சென்று கஷ்டப்பட்ட கதை என்று ஒவ்வொரு முறையும் சீதா கல்யாணத்தில் கதையை முடிப்பாள் யசோதை. அதற்குள் கண்ணன் ஊம் கொட்டிக்கொண்டே உறங்கியிருப்பான்.
இன்று மீதிக்கதை வேண்டுமென அடம் பிடித்தான்.

அதுக்கப்றம் ஒண்ணுமில்லடா..

அதெல்லாமில்ல. நான் நேத்து கோவில்ல கொஞ்ச நேரம்  உபன்யாசம் கேட்டேன். அவர் ராமர் காட்டுக்கு போனார் னு சொன்னார். 
நீ சொல்லு. ராமர் ஏன் காட்டுக்கு போனார்? காட்டில் என்ன பண்ணினார்?

இவன் விடப்போவதில்லை என்றுணர்ந்த யசோதா, 
சரி சொல்றேன் கேளு என்று ஆரம்பித்தாள்.
அப்பா சொன்னதைக் கேட்டு ராமன் காட்டுக்குப் போனார். ...

ஊம்....

காட்டுல சந்தோஷமா இருக்கும்போது....

ஊம்....

 ஒருநாள் ஒரு தங்க மான் வந்தது.

ஊம்....

அந்த மான் ரொம்ப அழகாயிருந்ததா....

ஊம்....

 சீதாம்மா ராமர்கிட்ட அதப்பிடிச்சுத் தரச் சொல்லி கேட்டாங்க.

ஊம்.....

ராமர் மானைத் துரத்திண்டு போய்ட்டு ரொம்ப நேரமா திரும்பிவரவேல்ல,....

ஊம்....

 ராமரத் தேடிண்டு, லக்ஷ்மணனும் போனார்.....

ஊம்....

அப்ப ராவணன்னு ஒரு பெரிய ராக்ஷசன் வந்தானா....
....

சீதைய தூக்கிண்டு கிளம்பினான்....

...அவ்வளவுதான் 
தன்வயப்பட்டுக் கதை கேட்டுக் கொண்டிருந்த  யசோதையிளஞ்சிங்கம் துள்ளியெழுந்தது...
இது அடுத்த அவதாரம் என்பதை மறந்து, 

லக்ஷ்மணா...
எடு என் வில்லை...

என்று கர்ஜித்தது...
யசோதை பயந்து போனாள்.

சட்டென்று சுதாரித்துக் கொண்டு, 

ராமர் சீதையை திருப்பிக்கூட்டிண்டு வந்துட்டார்டா...
கோவப்படாதடா...

என்றதும் அந்தக் குட்டிச்சிங்கமும் இது அடுத்த அவதாரமாயிற்றே.. என்று நினைவுக்கு வந்து கன்றுக்குட்டி போல் 
அப்படியாம்மா...என்று தாயிடம் கொஞ்சிக்கொண்டு  உறங்குவதற்குக் கண்ணை மூடிக்கொண்டது...

பயந்துட்ட பாத்தியா, அதுக்குதான் இவ்ளோ நாள் சொல்லல. பேசாம தூங்கு என்று தட்டித் தூங்கவைத்தாள் யசோதா.

ஆயர்பாடி மாளிகையில்
தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ.....

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37