உறங்கும் முன் - 16
பிறந்தநாள் பரிசு
கோகுலம் முழுவதும் அனைத்து தெருக்களிலும் தோரணங்கள் அலங்கரித்துக் கொண்டிருந்தன. அங்குள்ள ஆதிநாராயணர் கோவிலில் விசேஷ ஆராதனைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
எங்கு திரும்பினாலும், கண்ணனைப் பற்றி, அவனது லீலைகளைப் பற்றிய மதுரமான பேச்சுக்கள்.
ஒரு புறம் பெண்களும் ஆண்களும் கண்ணன் புகழைப் பாடிக்கொண்டும், கோலாட்டமிட்டுக் கொண்டுமிருந்தனர்.
வழக்கத்தைவிடக் கூட்டம் அதிகமாக இருந்தது. கோகுலத்திலுள்ளோர், அக்கம் பக்கத்து கிராமத்திலுள்ளோரும், இன்னுமும் சேர்ந்தால் கூட இவ்வளவு பேரா என்று சந்தேகம் வருகிறது. ஒருவேளை முப்பத்து முக்கோடி தேவரும்கூட கண்ணன் பிறந்தநாளில் கலந்துகொள்ள விழைந்து மாறுவேடத்தில் வந்துவிட்டனர் போலும்.
கோகுலம் மதுரபுரியாக மாறியிருந்தது.
கண்ணனுக்கு மந்திரம் ஓதி கலச நீர் கொண்டு நீராட்டம் நடந்தது. உச்சி முதல் பாதம் வரை அவனைப் பார்த்துப் பார்த்து அலங்காரம் செய்திருந்தாள் யசோதை. அழகிய பட்டுப் பீதாம்பரம், சிவப்பு உத்தரீயம், வைஜயந்தி மாலை, தங்கமுத்து மாலை, மேகலை, கிண்கிணி, தங்க நூபுரம், பெரிய மயில்பீலி வைத்த கிரீடம், அவன் தலையசைப்புக்கேற்ப நர்த்தனமாடும் குண்டலங்கள், குட்டி மன்மதன் போல் இருந்தான் கண்ணன்.
பெரியவர்கள் எல்லாரும் வந்து கண்ணனை ஆசீர்வாதம் செய்துவிட்டுப் போனார்கள். 90 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருத்தி வந்தாள்.
ஆசீர்வாதம் செய்வதற்காக, அட்சதையைக் கையில் எடுத்தவள், என்ன நினைத்தாளோ, கண்ணனின் கன்னத்தைத் தடவிக் கொஞ்சிவிட்டு, நான் தீர்காயுசா இருக்கணும் என்று சொல்லித் தன் தலையில் போட்டுக் கொண்டாள்.
எல்லோருக்கும் அதிர்ச்சி.
யசோதா சொன்னாள்,
பாட்டி உங்க தலைல ஏன் போட்டுக்கறீங்க? மறந்துபோச்சா? கண்ணனுக்குப் பிறந்த நாள் பாட்டி, அவனை வாழ்த்துங்க என்றாள்.
பாட்டி சொன்னாள்.
அதில்ல யசோதா
எனக்குத் தெரியாதா, இவனுக்குப் பொறந்த நாளுன்னு?
இவன் தினம் தினமும் புதுசா ஏதாவது பண்றான். ஒவ்வொண்ணும் பாக்க பாக்க ஆசையா இருக்கு.
பெரிய பெரிய ராட்சசனெல்லாம் வந்தாகூட ஜெயிச்சுடறான். அவன் நடக்கறதும், பேசறதும், பாக்கறதும், போக வர பாட்டீ கூப்பிட்டு விசாரிக்கறதும், அவ்ளோ அழகு.
நான் இன்னும் கொஞ்சம் சின்னவளா இருந்தா இன்னும் ரொம்பநாள் இருந்து இவன் பாத்துண்டே இருக்கலாம். நாராயணனே வந்த மாதிரி இவ்ளோ அழகா இவன் பிறந்து வளர்ர நேரம் பாத்து எனக்கு ரொம்ப வயசாச்சுன்னு நான் போயிட்டா என்ன பண்றது?
உன் பிள்ளை பண்ற லீலையெல்லாம் நானும் பாத்து, கேட்டு அனுபவிக்க வேண்டாமா?
இவன் தீர்காயுசா இருப்பான்னு எனக்குத் தெரியுமே.
அதனால இவனை சாட்சியா வெச்சு கண்ணன் பூமில இருக்கற வரைக்கும் நானும் இருக்கணும்னு என்னையே ஆசீர்வாதம் பண்ணிண்டேன்.
எல்லோரும் அசந்துபோய் பாட்டியைப் பார்த்துப் பார்த்து வியந்தனர்.
கண்ணனோ,
பாட்டீ, பத்திரம், சாப்பிட்டீங்களா? தனியா போவீங்களா? துணைக்கு ஆளனுப்பவா என்று கேட்டான்.
அவளோ, நீ இருக்கற ஊர்ல எனக்குத் துணை எதுக்குடா? எல்லாத்தையும் பாத்துட்டு அப்றமா நானே போய்க்கறேன் என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள்.
ஒவ்வொருவராய்க் கண்ணனை வாழ்த்திவிட்டுச் செல்ல, குட்டி கோபிகள் எல்லாரும் விழித்து விழித்துப் பார்த்துக் கொண்டு மெல்லிய சிரிப்புடன் நின்றுகொண்டேயிருந்தனர்.
இப்போது கண்ணனை அருகில் சென்று வாழ்த்த அவர்களுக்குக் கூச்சமாக இருந்தது.
காலையில் என்ன பரிசு கொடுக்கலாம் என்று வாதிட்ட சமயம், உலகத்தில் உயர்ந்த, அவனுக்குப் பிடித்த, அதைப்போல் மற்றொன்று இல்லாத பரிசு என்று தேடித் தேடிக் கண்டுகொண்டனர், அது அவர்கள் தானென்று.
எனவே தம்மையே கண்ணனுக்குக் கொடுத்துவிடுவதென்றும், அனைவரும் அவனையே காதலித்துத் திருமணம் செய்வதென்றும் ஏக மனதாக முடிவெத்ததால் இப்போது எல்லோர் முன்னிலையிலும் அவனருகில் சென்று வாழ்த்த வெட்கம் வந்துவிட்டது.
கண்ணனுக்கா தெரியாது? அவன்தான் அழுக்குகளில்லாத, தூய்மையான, வெண்ணெய் போல் உருகும் மென்மையான அன்பு நிறைந்த, உள்ளங்களில் நுழைந்து திருடுபவனாயிற்றே. தூரத்திலிருந்தவாறே அவர்களைப் பார்த்து ஒரு அழகிய புன்முறுவல் பூத்தான்.
இனி அவர்களது நிலை? அடடா, பீஷ்மர் போன்ற யோகிகளும், உத்தவன் போன்ற பக்தரும் கூட அடைய ஏங்கிடும் நிலையல்லவா?
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment