உறங்கும் முன் - 14
ஒண்ணுமே புரியல உலகத்தில..
பொழுது சாயச் சற்று நேரம் முன்பாக வீடு வந்து சேர்ந்தான் தாமரைக் கண்ணன். உடல் முழுதும் புழுதி படிந்து, ஆங்காங்கே மண்ணை அப்பிக்கொண்டு சற்றே கலைந்த தலையுடன் வந்திருந்த போதும், கண்ணைப் பறிக்கும் அழகுடனேயே விளங்கியது அவனது திருக்கோலம்.
என்னடா கண்ணா, காலைல போன, இப்பத்தான் வர, எங்க போன? எவ்ளோ அழுக்கு, ஒரு சொம்பு குளிக்கலாம் வா
அம்மா அம்மா... நான் இப்டியே அழகாதானே இருக்கேன். எதுக்கும்மா குளிக்க சொல்ற..
நீ எப்பவுமே அழகுதான். ஒரே புழுதி மண்ணு. அரிக்கும்டா. இங்க வா. என்று இழுத்துச் சென்றாள்.
மேல் நீர் ஊற்றிக்கொண்டே மெதுவாய்ப் பேச்சுக் கொடுத்தாள்.
காத்தாலேர்ந்து எங்கடா போன?
அம்மா, எல்லாக் குட்டிப் பசங்களும் சேர்ந்து விளையாடினோம்மா.. நேரம் போனதே தெரியல..
கண்ணா, ஊர்ல இருக்கற எல்லா கோபிகளும் நீ வெண்ணெய் திருடற வெண்ணெய் திருடறன்னு தினம் தினம் புகார் சொல்றாங்க..நீ அம்மா கிட்ட உண்மைய சொல்லு.. நீ நேத்திக்கு அந்த ஸுமுகி வீட்டில அவங்க இல்லாத நேரமாப் போய் வெண்ணெயும் பலகாரமும் எடுத்து சாப்பிட்டியா?
இடுப்பைத் தேய்த்துக் குளிப்பாட்ட, கிச்சு கிச்சு மூட்டும்படி இருந்ததால் கண்ணன் கலகலவென்று சிரித்தான்.
அவன் சிரிப்பில் தன் கேள்வியை மறந்துதான் போனாள் யசோதை.
மீண்டும் சற்று சுதாரித்துக்கொண்டு உடலைத் துவட்டி விட்டவாறு கேட்டாள்.
சொல்லுடா, நேத்திக்கு அவங்க வீட்டுக்குப் போனியா
தன் இரண்டு குட்டிக்கைகளாலும் தலையைத் தேய்த்துக்கொண்டு,
அம்மா, எனக்குத் தலையெல்லாம் ஒரே குழம்புதும்மா
நான் சின்னப் பையன்தானே.
நீ மாத்தி மாத்தி சொன்னா எனக்கு எப்படிம்மா புரியும்?
இப்போது யசோதைக்கு ஒன்றும் புரியவில்லை.
நான் மாத்தி மாத்தி சொல்றேனா,
திருதிருவென்று விழித்தாள்.
என்னடா சொல்ற?
நான் என்ன மாத்தி மாத்தி சொன்னேன்?
ஆமாம்மா நீ மாத்தி மாத்திதான் சொல்ற. நான் என்ன செய்யணும்னு தெளிவா சொல்ல மாட்டேங்கற..
ஒண்ணுமே புரியலையேடா
அம்மா நீ நேத்திக்கொண்ணு சொல்ற. அதுக்கு முதல் நாள் வேற மாதிரி சொன்ன
என்ன சொன்னேன்?
நேத்திக்கு முதல் நாள் ராத்திரி ராமாயணக் கதை சொல்லும்போது என்ன சொன்ன?
என்ன சொன்னேன்?
நம் வீடு அடுத்த வீடுன்னு பேதம் இல்லாம ராமன் மாதிரி எல்லார்கிட்டயும் சரி சமமா பழகணும்னு சொன்னதானே?
ஆமாம். அப்படிதான் பழகணும். அதுக்கென்ன?
நான் அதனாலதான் நம்ம வீடு அவங்க வீடுன்னு பாக்காம உள்ள போய் எடுத்து சாப்பிட்டேன். அவங்க வீட்டு வெண்ணெயும் நம்ம வீட்டுது மாதிரியே நல்லா இருந்ததும்மா.
என்றானே பார்க்க வேண்டும்.
என்னடா இப்படி சொல்ற?
பின்ன என்னம்மா?
ஒரு நாள் வித்தியாசம் பாக்காதங்கற. சரின்னு வித்தியாசம் பாக்காம மத்த வீட்டுக்குப் போனா திருட்டுங்கற..எனக்கு புரியவேல்ல மா. நான் சின்னக் குழந்தை தானேம்மா..நீ எப்பவும் ஒரே மாதிரி சொல்லும்மா...
என்றான்.
அவனுக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் வாயடைத்துப்போய் நின்றாள் யசோதை.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
Comments
Post a Comment