உறங்கும் முன் - 13

நாவற்பழமும் நவரத்ன வளையலும்

வா கிரிஜா, என்ன இவ்ளோ வேகம்? இப்டி உக்காரு. கிரிஜாவின் வேகம் கண்ணனின் விளையாட்டைக் கண்டதும் சற்று குறைந்தது. யசோதையின் உபசரிப்பில் முற்றும் தணிந்தது.

யசோதை கண்ணைக் காட்டியதும் இனிக்கும் தயிர் வந்தது.
அதைக் கொடுத்துவிட்டு மெதுவாய்க் கேட்டாள் யசோதை..
என்ன விசெஷம் கிரிஜா, இந்தப்பக்கம் வந்திருக்க?

அது சரி. ஊரே வெண்ணெய்த் திருடன் என்று மெச்சும்படி ஒரு பிள்ளையைப் பெத்துட்டு, அதைச் சொல்றவங்க வாயைப் பேசியே அடைச்சுடுவ. எப்படியும் உங்கிட்ட சொன்னா, நீ ஒத்துக்கமாட்ட.

இப்டி சொன்னா எப்டி? சொன்னாதானே தெரியும்? 

உன் பிள்ளையின் திரிசமத்த என்னன்னு சொல்ல?

நேத்து எல்லாம் சமைச்சு வெச்சிட்டு, கொஞ்சம் பலகாரமும் செஞ்சு வெச்சுட்டு, மதுரையில் ஒரு சீமந்தத்துக்கு போனேன்.
ஆரம்பித்தாள் கிரிஜா.

வீட்டு வாசல் திண்ணையில் ஸுமுகி என்ற குட்டி கோபி உட்கார்ந்து மலங்க மலங்க விழித்துக்கொண்டு அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தாண்டிச் சென்ற கண்ணனுக்கு என்னவோ வித்தியாசமாகப் பட்டது.
அவளருகே சென்று அமர்ந்தான்.
அவனைப் பார்த்ததும் அவள் வாய் மீது ஒரு விரலை வைத்துக்கொண்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
சிரித்துவிட்டான் கண்ணன்.

ஏன் வாசல்ல உக்கந்திருக்க?

விழித்துப் பார்த்தாள்.

பேசமாட்டியா?

உன்கூட பேசக்கூடாதுன்னு அம்மா சொல்லிருக்காங்க..

ஸுமுகீ, நீ இன்னிக்கு எவ்ளோ அழக்க்கா இருக்க தெரியுமா?

டக்கென்று திரும்பி, 
நிஜம்மாவா க்ருஷ்ணா..

ஆமாம் போயேன். ரொம்ப அழகு. இப்ப சொல்லு. அம்மா ஏன் என்கூட பேசாதன்னு சொன்னாங்க..

உள்ள நிறைய பலகாரம் செஞ்சு வெச்சிருக்காங்க.. நீ வந்தா உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு சொன்னாங்க. நான் உன்கிட்ட பேசினா சொல்லிடுவேன்னு பேசக்கூடாதுன்னு சொன்னாங்க.

சரி, அம்மா எங்க போயிருக்காங்க?

மதுரைக்கு.

உனக்கு பசிக்கலையா?
நீ சாப்பிடலையா?
வீடு பூட்டியிருக்கே.

சாவி எரவாணத்தில இருக்கே....அதையும் உன்கிட்ட சொல்லாதேன்னு சொல்லிருக்காங்க..

நீதான் எதுவுமே சொல்லலியே..
ஸுமுகி நீ ரொம்ப புத்திசாலி...

ஆனா அம்மா எப்பவும் மண்டுனு திட்டறாங்க கண்ணா..

அவங்க சொன்னா சொல்லட்டும்...இன்னிக்கு சாயங்காலம் தெரிஞ்சுப்பாங் க நீ எவ்ளோ பெரிய புத்திசாலின்னு. பசிக்குது.
நீ வா..நாம சாப்பிடலாம்..

சரி கண்ணா..

எரவாணத்திலிருந்து சாவியை எடுத்துத் திறந்து எல்லாவற்றையும் விழுங்கிவிட்டு, போனால் போகிறதென்று அவளுக்கும் கொஞ்சம் கொடுத்தான்.. 
பிறகு வெளியே வந்து வீட்டைப் பூட்டி விட்டுச் 
சாவியை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டுச் சொன்னான்.

ஸுமுகீ, உன் கைவளையல் ரொம்ப அழகா இருக்கே.

ஆமா, கண்ணா. அப்பா நேத்து வாங்கிட்டு வந்தார். மரகத வளையலாம். அழகா இருக்கில்ல...

ஆமா ஆமா.
அம்மா வர வரைக்கும் நீ தனியா என்ன செய்வ?

தெரியல கண்ணா...

நாம ரெண்டு பேரும் விளையாடலாமா?

ஒரே சந்தோஷம் அந்தக் குட்டிப்பெண்ணுக்கு. கண்ணனோடு விளையாட்டு. அதுவும் அவனே அழைக்கிறான்..

ஓ விளையாடலாமே..
பெரிதாய்த் தலையாட்டியது.

உன் வளையல கழட்டு. நான் இந்தக் குச்சியில் மாட்டிப்பேன்.
நாந்தான் வளையல் விக்கற செட்டியாராம். நீதான் வளையல் வாங்க வந்த பெண்ணாம். 
நீ என்னிடம் வளையல் வாங்குவியாம்.

என்றதும், திருப்பிக் கொடுத்துருவல்ல கண்ணா..
என்று கேட்டுக்கொண்டே கழற்றிக்கொடுத்தது அந்தப் பெண்.

வளையல்களை வாங்கி ஒரு சிறு குச்சியில் மாட்டிக்கொண்டு, அதைத் தோளில் சாய்த்துக் கொண்டு இப்படியும் அப்படியுமாய் நடந்து 
ம்ம். என்னைக் கூப்பிடு என்றான்.
செட்டியாரே, செட்டியாரே என்று கூப்பிட்டுக்கொண்டு  அவன் பின்னாலேயே சென்றாள் சிறுமி. அவனோ போய்க்கொண்டே இருந்தான்.

எதிரில் நாவல் பழம் விற்கும் பாட்டி வந்தாள். அவளிடம் அந்த மரகத வளையல்களைக் கொடுத்துவிட்டு, பதிலுக்கு நாவல் பழங்கள்  வாங்கினான்.

நாங்க ரெண்டு பேரும் சாப்டோம்மா ங்கறா என் பொண்ணு. 

இவனோட திரிசமத்தை சொல்லவா, என் பொண்ணோட சமத்தை சொல்லவா 
என்ன சொல்றதுன்னு தெரியல யசோதா...
என்ன சொன்னாலும் நீ என்னமோ ஒத்துக்கமாட்ட..
என்றவள். 

இதில கொடுமை என்னன்னா, 
அந்த நாவல் பழக்காரப் பாட்டி நாலுநாள் முன்னாடி எங்கிட்ட வந்து பொழப்புக்கு வழியில்லன்னு அழுதா. சரி என் வீட்டு கொல்லையில, நாவல் மரம் பழுத்திருக்கு. விழறதைப் பொறுக்கிப் போட்டு வித்துப் பிழைச்சுக்கோன்னு சொன்னேன்.

என் வீட்டு நாவல்பழத்துக்கே என் பெண்ணோட மரகத வளையல வித்திருக்கான் நீ தவமிருந்து பெத்த பையன்
என்று முடித்தாள்.

நேற்று மாலை கண்ணனின் நாக்கும் பற்களும்  ஊதாநிறத்தில் இருந்தன. கேட்டதற்கு பாட்டி நாவல் பழம் கொடுத்தாங்க சாப்பிட்டேன் என்று சொன்னது யசோதையின் நினைவுக்கு வந்தது.

பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் நடப்பதால், யசோதை இரண்டு மூன்று நாட்களாக நல்ல மனநிலையில் இருந்தாள்.

எனவே, புகார் படித்த கோபியிடம் சண்டையிடாமல், சரி இரு வரேன் என்று சொல்லி, கண்ணனுடைய இரண்டு நவரத்தின வளையல்களைக் கொடுத்து உன் பொண்ணுக்கு வெச்சுக்கோ என்றாள்.

இப்போது அந்தக் குட்டிபெண்  ஸுமுகி என்ன செய்கிறாள் தெரியுமா?
கண்ணனின் நவரத்தின வளையல்களைக் கையில் போட்டுக் கொண்டு, 
நான் கண்ணனோட வளையலை போட்டிருக்கேனாக்கும் என்று வீடு வீடாய்ச் சென்று எல்லா கோபிகளையும் வெறுப்பேற்றிக்கொண்டிருக்கிறாள்.

சொல்லில் அரசி படுதி நங்காய்! சூழல் உடையன் உன் பிள்ளை தானே!
இல்லம் புகுந்தென் மகளைக் கூவி கைவளைதன்னைக் கழற்றிக்கொண்டு கொல்லையினின்றும் கொணர்ந்து விற்ற அங்கொருத்திக்கு அவ்வளை கொடுத்து நல்லன நாவற்பழங்கள் கொண்டு நானல்லேன் என்று சிரிக்கின்றானே
- பெரியாழ்வார்

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37