உறங்கும் முன் - 18

பானைக்குள் கன்று

பெரிய கோபச் சிறுவர் கூட்டத்தோடு வெண்ணெய் வேட்டைக்குக் கிளம்பினான் கோபாலன்.
கண்ணா,  இன்னிக்கு யார் வீட்டுக்கு போப்போறோம்?

பேசாம வாடா.

நேராக, சொல்லி வைத்தாற் போல் ஒரு வீட்டு வாசலில் நின்றுகொண்டு ஒரு சிறுவனை அனுப்பினான். அவன் மெதுவாக உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு, ஜாடை காட்ட, படையுடன் உள்ளே நுழைந்தான் கண்ணன்.

எங்கே தேடியும் வெண்ணெய்ப் பானை கிடைக்கவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே கண்ணன் மேலே பார்க்கவும், நான் இங்கே இருக்கிறேன் என்று சொல்வதுபோல் வெண்ணெய்ப் பானையிலிருந்து ஒரு சொட்டு நீர் சொட்டவும் சரியாக இருந்தது. அந்த கோபி மிகவும் யோசித்து நல்ல உயரத்தில் உறியைக் கட்டி அதில் பானைகளை ஏற்றி வைத்திருந்தாள். எப்படிக் குதித்தாலும் எட்டவில்லை.

சற்று பெரியவனாக இருந்த ததிபாண்டன் என்ற சிறுவனைக் குனிய வைத்து அவன் மேல் இன்னொருவனை ஏற்றி அவர்கள் மேல் தன் பட்டுப் பாதங்களை வைத்து ஏறினான்.

ஆஹா.. வெண்ணெய்ப் பானை எட்டிவிட்டதும், அவன் முகத்தில்தான் எவ்வளவு ஆனந்தம்.

கொஞ்சம் எடுத்துச் சுவைத்துப் பார்த்தான்..
மதுரமாய் இருந்தது.
குட்டிக் கை நிறைய அள்ளி அள்ளிச் சுவைக்க, அவன் முழங்கை வழிவார விழுந்த வெண்ணெயை ‌மற்ற சிறுவர்கள் ஏந்திக் குடிக்க, அவனது அதராம்ருதம் சேர்ந்த வெண்ணெயின் சுவை போதை தந்தது அவர்களுக்கு.

ருசித்துச் சுவைத்துக் கொண்டிருக்கையில், புழக்கடைக் கதவைத் திறந்துகொண்டு வந்தாள் கோமதி.

அவள் இதுவரை கண்ணனைப் பார்த்ததில்லை. கஷ்டப்பட்டு மெழுகிய  வீடு  முழுவதும் வெண்ணெய்க் கோலங்கள். அவளைப் பார்த்ததும் சிறுவர்கள் அங்குமிங்கும் தெறித்து ஓடிவிட்டனர்.

கீழே நின்று கொண்டிருந்த சிறுவர்கள் ஓடியதும், கண்ணன் மேலே இருந்த உறியைப் பிடித்து ஒரே தாவாய்த் தாவி உறிமேலேயே உட்கார்ந்து கொண்டு ஊஞ்சல் போலாட ஆரம்பித்தான்.

அந்தப் புதிய கோபிக்கு ஒன்றுமே புரியவில்லை..

சமைத்து வைக்கச்சொல்லிவிட்டுப்  போயிருக்கும் மாமியார் இன்னும் சற்று நேரத்தில் திரும்பி விடுவார். வீடு முழுதும் ஒரே களேபரம். இதில் உறியின் மீது உட்கார்ந்து மடியில் வெண்ணெய்ப் பானையை வைத்துக்கொண்டு, வெண்ணெயை எடுத்து ஒவ்வொரு விரலாய் நக்கிகொண்டு ஒரு சிறுவன் ஆடிக்கொண்டிருக்கிறான்.
அவன் அழகு கண்ணை இழுத்தபோதும், அவன் அடித்திருக்கும் லூட்டியைப் பார்த்து அவளுக்கு மிகுந்த கோபம் வந்தது.

யாரடா நீ?

நான் பலராமன் தம்பி மாமி

நீ யாராயிருந்தால் என்ன?

எதுக்கு இங்க வந்த?

மாமீ .. எங்க வீட்டு கன்னுக் குட்டியைக் காணோம் மாமீ

அதுக்கு?

நான் அதத் தேடிண்டு வந்தேனா..

அதென்ன உறி மேலயா மேயறது?

இந்த உறி மேல வெண்ணெய் வழிஞ்சு வழிஞ்சு ஒரு கோடு விழுந்திருக்கில்ல..

...
அதை கன்னுக்குட்டி வாலுன்னு நினைச்சேன் மாமீ

கன்னுக்குட்டி எங்கயாவது உறி மேல ஏறுமாடா?
யார ஏமாத்தற?

ஏறாதா மாமீ... எனக்கெப்படித் தெரியும்? நான் சின்னப் பையன்தானே..
உறிமேல இருக்குன்னு நினைச்சு ஏறினேன்...

உறிமேல கன்னுக்குட்டி இருக்கா?

இல்லியே

பின்ன என்ன பண்ற.. இறங்க வெண்டியதுதானே. வெண்ணெயை எதுக்கு எடுத்த?

பானைக்குள்ள கன்னுக்குட்டி ன்னு நினைச்சு கைய விட்டேனா...வெண்ணெய் வந்ததா...உங்க வீட்டு வெண்ணெய் எவ்ளோ ருசியா இருக்கு? எடுத்ததை அப்டியே வெச்சா வீணாப்போகுமேன்னு சாப்பிடறேன்..சரி மாமீ, நீங்க நகருங்க.. நா வீட்டுக்கு போணும்..

அது சரி. உன்ன வீட்டுக்கு விடறதா..நீ எறங்கு. உன்ன என் மாமியார் கிட்ட பிடிச்சுக் கொடுத்துட்டுத் தான் வேற வேலை..

மாமீ.. வேணாம் நீங்க ஊருக்கு புதுசு. உங்களுக்கு என்னப் பத்தி தெரியாது..

ஓ மிரட்டறியோ.. நீ எப்படிப் போறன்னு பாக்கறேன்.

சட்டென்று புழக்கடைக் கதவை மேல் தாழ்ப்பாள் போட்டுவிட்டு விடுவிடென்று போய்,  வாசலை அடைத்துக் கொண்டு நின்றாள். அவளது உருவம் வாசலுக்கு சரியாக இருந்தது.

மாமீ வேணாம் வழி விட்டுடுங்க. இல்லாட்டா உங்களுக்கு தான் கஷ்டம்...

அதையும் பாக்கலாண்டா.. இன்னிக்கு உன்னை விடறதா இல்ல..

அப்றம் உங்க இஷ்டம்.. என்று 
கண்ணன் கை நிறைய வெண்ணெயை எடுத்து வாயின் இரு புறமும் அதக்கிக் கொண்டு ஜல்லென்று உறியிலிருந்து குதித்தான்.
அவளருகில் ஓடிவந்து ஒரு தாவல் தாவி அவள் முகத்தில் வெண்ணெயை ப்ப்பூ.. என்று ஊதினான். அவள் முகம் முழுதும் வெண்ணெய்..
அவள் கண்ணைக் கசக்கும் சமயம் சற்று காலை எடுக்க இடுக்கில் நுழைந்து ஓடி விட்டான்.

அவள் முகத்தை ஒரு வழியாய்த் துடைத்துக் கொண்டு வீட்டை மெழுகத் துவங்கினாள். 
நதிக்குச் சென்ற மாமியார் திரும்பும் சமயமாய், அவளெதிரில் சென்ற கண்ணன் மாமீ உங்க வீட்ல ஒரு புது மாமி இருக்காங்களே அவங்க வெண்ணெயை வழிச்சு வழிச்சு சாப்பிடறாங்க.. நாங்க தெருவில விளையாடிட்டு தண்ணி குடிக்க உங்க வீட்டுக்குப் போனப்பதான் பாத்தேன் என்று கூறிவிட்டு ஓடினான்.

உள்ளே வந்த மாமியார்
ஏண்டி சமைச்சு வெக்க சொன்னா, வெண்ணெய முழுங்கிண்டிருக்க.  நானும் நாளுக்கு நாள் குண்டாகறயேன்னு பத்தியம் சொன்னா, நீ இப்படி வெண்ணய முழுங்கற..

இல்லம்மா... ஒரு குட்டி பையன்..

யாரு? கண்ணனா? அவன் ரொம்ப சமத்து. நீ முழுங்கிட்டு அவன சொல்றயோ? அவன்தான் நீ வெண்ணெய் சாப்பிடறன்னே சொன்னான்...
வேலயுமாகல.. 
என்று அவள் ஏசியது கோகுலம் முழுவதும் கேட்டது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாஸங்களில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37