உறங்கும் முன் - 8
எளிமைக்கொரு தெய்வம் எங்கள் கண்ணன்
வீட்டு வாசலில் உள்ள திண்ணையில் அமர்ந்து காலாட்டிக்கொண்டு போவோர் வருவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் கோபாலன்.
வியாபாரத்திற்காக வண்டியில் சாமான்களைக் கட்டிக்கொண்டு சிலர் போய்க்கொண்டிருந்தனர். வழியில் கண்ணனைப் பார்த்ததும் மிகுந்த சந்தோஷத்துடன் கையாட்டினார்கள்.
கோபச் சிறுவர் கூட்டமொன்று வந்தது.
கண்ணா வா சந்தைக்குப் போலாம்
நீங்க எல்லாரும் போங்கடா. நா பின்னாடியே வரேன்..
நீயும் வாயேண்டா
கொஞ்ச நேரம் கழிச்சு வர்ரேண்டா. எல்லாரும் முன்னாடி போங்க..
சந்தையில் எல்லாம் கிடைக்கும்.
மளிகை, துணிமணிகள், அலங்காரப் பொருட்கள், காய்கறிகள், இனிப்பு, பலகார வகைகள், வீட்டிற்குத்தேவையான அனைத்துமே கிடைக்கும்.
இப்போது நான்கைந்து கோபிகள், பேசிக்கொண்டு வந்துகொண்டிருந்தனர்.
கண்ணன் பிறந்ததிலிருந்து பொதுவாக எல்லோரிடமும் ஒரு பழக்கமிருந்தது. அது என்னவெனில், சந்தைக்குச் சென்றால், தங்களுக்கு வேண்டியதை வாங்குவதோடன்றி, கண்ணனுக்கென்று ஏதாவது, ஒரு விளையாட்டுப் பொருளோ, இனிப்போ, ஏதோ ஒன்று நிச்சயம் வாங்குவார்கள்.
இந்த விஷயம் அறிந்த வெளியூர் வியாபாரிகள் வித்தியாசம் வித்தியாசமாக எதையாவது விளையாட்டுப் பொருளை, உங்கள் ஊர் கண்ணனுக்கென்று சொல்லி கோகுல வாசிகள் தலையில் கட்டுவார்கள்.
இதில் கோபியர் வேறு ரகம். எது வாங்கினாலும் கண்ணனிடம் அபிப்ராயம் கேட்டுவிட்டு வாங்குவார்கள். அவன் சரியென்றால் வாங்குவது, இல்லையெனில் வேண்டாம்.
ஒரு சிலர் வாங்கியபின் கண்ணனுக்குப் பிடிக்கவில்லையென்றால் தூக்கிப்போட்டு விடுவார்கள்.
கண்ணன் ஏதாவது கடைக்குள் நுழைந்தால் அந்தக் கடைக்காரர் நிச்சயம் ஒரு பரிசளித்து விடுவார். ஏனெனில் அன்று அவர் கடையிலுள்ள அத்தனையும் விற்றுப்போகும்.
தூரத்தில் வந்துகொண்டிருந்த கோபிகளைப் பார்த்தும் பார்க்காதவன் போல் திரும்பிக் கொண்டான் கண்ணன்.
அவர்கள் இவனைப் பார்த்ததும்,
ஹை கண்ணன், நல்லவேளையா இவன இங்கயே பாத்தாச்சு.
கண்ணா எங்களோட வரயா?
எங்க?
சந்தைக்கு..வேறெங்க?
எதுக்கு?
உறுத்துப் பார்த்தான்
இதென்ன இப்டிக் கேக்கற?
நாங்க மஞ்சள் வாங்கப் போறோம்.
எங்களுக்கு உதவி செய்யேன்.
பதிலைக் காணோம்.
உனக்கு மிட்டாயும், வெண்ணெயும் தரோம்டா..
நீ குடுக்கற ஒரு உருண்டை வெண்ணெய்க்கு நா வரணுமா
ஆளுக்கொரு உருண்டை தரோம்டா..
தானாக வந்து வாயைக் கொடுத்தனர்.
பேச்சு மாறக்கூடாது...
நிச்சயமா இல்ல..
சரி வரேன்.
அவர்கள் கையைப் பிடித்துக்கொண்டு குட்டிக் குட்டிப் பதம் வைத்து அழகாக நடந்து போனான்.
பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் போனார்கள்.
எவ்வளவு கதைகள் உள்ளன அவர்களுக்குக் கண்ணனோடு பேச...
சந்தைக்கு வந்துவிட்டார்கள்.
வளையல் கடைக்குள் போனார்கள்.
ஒவ்வொன்றாய் எடுத்து கண்ணனைப் பார்ப்பார்கள்.
அவன் தலையாட்டினால் மட்டும் வாங்கினர்.
வாசனைப் பொடியும் வாங்கிக்கொண்டு
மஞ்சள் கிழங்கு விற்கும் கடைக்குப் போனார்கள்.
கண்ணா கொஞ்சம் குனி
உன் மீது தேய்ச்சுப் பார்த்துட்டுத்தான் வாங்கணும்.
ஏன்? உம்மேலயே தேச்சுக்கோயேன்.
இல்லடா, எங்க மேல தேய்ச்சா மஞ்சள் பத்துமா பத்தாதான்னு தெரியாது என்றாள் தங்க நிறத்திலிருந்த அந்த கோபி.
என் மேல தேச்சா தெரிஞ்சுடுமோ?
நீதான் கருப்பா அழகா இருக்க..
உன் மேல தேச்சாதானே மஞ்சளோட நிறம் தெரியும்.
ஓ அப்ப சரி. ஆளுக்கொரு உருண்டை வெண்ணெய்..
தரோம் தரோம்.. குனிடா
மூவுலகிற்கும் அதிபதி, வேதமூலன், தேவாதிதேவன், 10000 வருடங்கள் தவம் செய்யும் முனிவர்க்குக் கூட அவனது காட்சி கிடைப்பதரிதாயிருக்க, அந்தப் பரம்பொருளோ இந்த கோபிகளின் பின்னால் வந்து அவர்கள் தரப்போகும் ஒரு உருண்டை வெண்ணெய்க்காக அவர்கள் சொல்கிறபடியெல்லாம் செய்து கொண்டிருந்தது.
எளிமைக்கொரு தெய்வம் எங்கள் கண்ணன்.
வேறெந்த தெய்வத்திடமாவது இப்படிப்பட்ட
நீர்மையைப் பார்க்கமுடியுமா?
நல்லா குனிடா...
முழங்கால் மீது கையை வைத்துக்கொண்டு குனிந்தான். அவர்கள் எல்லோரும் அவன் முதுகில் ஒரு கை நீரைத் தெளித்து ஒவ்வொரு மஞ்சள் கிழங்காக அவன் முதுகில் தேய்த்துப் பார்த்து, ஆளுக்கொரு சேர் வாங்கிக் கொண்டார்கள்.
அவன் முதுகு முழுவதும் மஞ்சளாக ஆயிற்று....
வெண்ணெய்? அதை அவர்களிடம் எப்படி வசூல் செய்தானென நாளை பார்க்கலாம்.
தினம் தினம் கோபியரிடம் திட்டு வாங்கி, வேலை செய்து கொடுத்து, மத்தால் அடி வாங்கி, வெண்ணெயும் திருடி, அப்பப்பா அவன் செய்த லீலைகள் ஏராளம் ஏராளம்.
முடிந்தவரை அனுபவிப்போம்.
Comments
Post a Comment