உறங்கும் முன் – 6

வந்தது யார்?


வெளியில் விளையாடச் சென்றுவிட்டு, உள்ளே வரும்போதே நீலபாலன் கத்திக்கொண்டு வந்தான்.
அம்மா... அம்மா.. அம்ம்ம்மம்ம்மா....


நான்கு கட்டு தாண்டி உள் கூடத்தில் வேலை செய்துகொண்டிருந்த யசோதைக்கு அவன் வீட்டு வாசலில் கால் வைக்கும்போதே தெரிந்துவிடும். குரல் வேறு கொடுத்தால் கேட்காமல் போகுமா? இருந்தாலும் குழந்தையின் கொஞ்சும் குரலில் அம்மா அம்மா என்று கேட்க எவ்வளவு ஆனந்தம்!


ஈரேழு புவனங்கள் படைத்தவன் இப்படி அம்மா அம்மா என்று கூப்பிட என்ன பாக்கியம் செய்தாளோ?


இரண்டு மூன்று முறை கூப்பிடும் குரல் கேட்டதும் வருகிறேனடா.. என்று பதில் குரல் கொடுத்துக்கொண்டே வந்தாள்.


என்னாச்சு? ஏண்டா இப்படி கூப்பாடு போடற?


அம்மா.. இன்னிக்கொரு விஷயம் நடந்தது


என்ன?


அந்த வாசுதேவன் தெருவுல மூணாவது வீட்டுல ஒரு மாமி இருக்காங்களே. அவங்க பேரு கூட என்னமோ வருமே..


தாக்ஷாயணி. அவளுக்கென்ன?


அவங்க ரொம்ப மோசம். நீ அவங்க கூட எல்லாம் சேராதம்மா.


ஏண்டா...


அவங்க பையன் சுபலன் எப்ப என்னைத் தேடி நம்ம வீட்டுக்கு வந்தாலும் நீ அவனுக்கும் வெண்ணெய் கொடுப்பல்ல..


ஆமாம். அதுக்கு?


நான் இன்னிக்கு அவங்க வீட்டுக்கு சுபலனை விளையாடக் கூப்பிடலாம்னு போனேம்மா.
என்னப் பாத்ததும் வெண்ணெய்த் திருடன் வந்துட்டான்னு சொல்லி பானையை ஒளிச்சு வெக்கறாங்கம்மா


நிஜம்மா சொல்லு...நீ அவங்க வீட்டுக்கு வெண்ணெய் திருடப்போனியா?


இல்லம்மா...இன்னும் சொல்லப்போனா, நான் வெண்ணெய் குடுங்கன்னு கேக்கக்கூட இல்ல. நம்ம வீட்ல இல்லாத வெண்ணெயா.. நீதான் எனக்கு நிறையக் குடுக்கறியே...அவங்க சுபலனுக்கு வெண்ணெய் கொடுத்திண்டிருந்தாங்க. அந்த சமயமா நான் போனேனா. எனக்கு கொடுக்கலன்னா கூட பரவால்ல. ஒரு உருண்டை வெண்ணெய் கூட தராம திருடன்னு வேற சொல்றாங்க. இன்னிக்கு அவங்க வீட்ல வெண்ணெய் காணாம போச்சுன்னா என்னப் பத்தி உன் கிட்ட புகார் சொல்வேன்னு வேற மிரட்டறாங்கம்மா.


அப்டியா.. நீ நிஜமா அவங்க வெண்ணெயை திருடலையே..


இல்லவே இல்லம்மா. எனக்கு பசிக்கறது. எதாவது சாப்பிடத் தரியா?


அவ்வளவுதான். பசிக்கிறது என்ற ஒரு வார்த்தை போதும். யசோதை நம்பிவிட்டாள். வயிறு புடைக்க எங்காவது வெண்ணெயை விழுங்கிவிட்டு வந்து சாப்பிடப் படுத்துவானே. பசிக்கிறதென்றால் எங்கும் ஒன்றும் சாப்பிடவில்லை என்று அர்த்தம்.


நீ வாடா தங்கம். பயப்படாத..அவ வந்தா நான் பாத்துக்கறேன். நீ கொஞ்சம் பருப்பு சாதம் சாப்பிடு. அப்புறம் அம்மா ஒரு கிண்ணம் நிறைய வெண்ணெய் தருவேனாம்.


அம்மாவும் பிள்ளையும் கொஞ்சிக்கொண்டே உள்ளே சென்றனர்.


சாப்பிட்டு சமத்தாக உறங்கப்போனான் கண்ணன். அவனுக்கு ராமாயணக் கதை சொல்லித் தூங்க வைத்து விட்டாள்.


காலையில் விடிந்ததும் விடியாததுமாக வேகு வேகென்று வந்தாள் தாக்ஷாயணி.


அவள் வரும் வேகத்தைப் பார்த்தால் பயமாயிருந்தது யசோதைக்கு. ஒருவேளை இந்தப்பய வெண்ணெயை திருடியிருப்பானோ? சேச்சே.. இருக்காது. சமாளித்துக்கொண்டாள். தினம் தினம் கண்ணனைத் தேடி வரும் ஊர்ப் பிள்ளைகளுக்கெல்லாம் வெண்ணெய் கொடுக்கறேன். ஒரு நாள் வீட்டுக்கு வந்த பிள்ளை, அதுவும் அவள் பிள்ளையின் தோழன் வேற, ஒரு உருண்டை வெண்ணெய் கொடுத்தால் என்ன இவள் குறைஞ்சு போயிடுவாளா. வரட்டும் என்ன சொல்கிறாள் என்று பார்ப்போம்.


மூச்சிரைக்க வந்த தாக்ஷாயணி,

யசோதை, யசோதை .. என்று கூக்குரலிட்டாள்.

சொல்லும்மா ஏன் இப்டி வேகமா வர? தீர்த்தம் சாப்பிடறயா?


அதெல்லாம் வேணாம். என்னமோ உன் பிள்ளை ரொம்ப ஒழுங்குன்னு எப்பவும் சொல்லுவியே. நேத்திக்கு என்ன பண்ணினான் தெரியுமா?


எனக்கெப்படித் தெரியும்? நீதான் சொல்லேன்.
வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு நிதானமாகச் சொன்னாள் யசோதை.


யசோதையின் நிதானத்தைப் பார்த்து அந்த கோபிக்கு இன்னும் கோபம் தலைக்கேறியது.


என் வீட்ல பொழுது போனதுமே சாப்பிட்டு தூங்கப்போனோம் எல்லாரும். ராத்திரி இரண்டாம் ஜாமத்தில் திடீர்னு சத்தம் கேட்டுது. என்னன்னு பாத்தா உன் திருட்டுக் கண்ணன், மஞ்சள் பட்டு, காதுல வைரக் குண்டலம், சுருட்டை முடி,, மயில் பீலி, அங்கே இங்கே யாராவது வராங்களானு பாத்துண்டு, வெண்ணெய்ப் பானையை எடுத்து மடில வெச்சுண்டு உள்ள கையை விட்டு ஒவ்வொரு விரலா நக்கி நக்கி ருசிச்சு சாப்டுண்டிருக்கான்.


திருடினான் னு புகார் சொல்ல வந்தாக்கூட என்னமா வர்ணிக்கறா. இவ கண்ணே என் பிள்ளைக்கு பட்டிருக்கும். குழந்தையின் கன்னம் நேத்திக்கு சொரசொரப்பா இருந்த மாதிரி இருந்தது. (அவன் மண்ணில் விளையாடிவிட்டு மண்ணை அப்பிக்கொண்டு வந்திருந்தான்) இவ போகட்டும். இவ காலடி மண்ண எடுத்து திருஷ்டி சுத்திப் போடணும். மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் யசோதை.


அவன் நக்கி சாப்பிடற வரைக்கும் வேடிக்கை பாத்தியோ? கையோட அவனைப் பிடிச்சுண்டு வராதுதானே..


நானும் பிடிச்சுட்டேனே...ஏண்டா திருடறனு முதுகிலயும் ஒண்ணு வெச்சேன். வெள்ளந்தியாய் வாக்குமூலம் கொடுத்தாள் தாக்ஷாயணி.


என்னது? என் குழந்தையை அடிப்பாளா இவள்? இருக்கட்டும். என்ன பண்றேன் பார் உன்னை - மனதிற்குள் யசோதை


என் வீட்டுக்காரர் ஏண்டி ராத்திரில சத்தம் போடறனு கேட்டுண்டே விளக்கெடுத்துட்டு வந்தார். பாத்தா, என் கையில என் பிள்ளை சுபலனையே மாட்டிக்கொடுத்துட்டு எப்படி தப்பிச்சான்னே தெரியல. அவன் முதுகில நான் வெச்ச அடி, அப்டியே கை பதிஞ்சிருக்கு.


நான் நல்லா பாத்தேன் திருடினது கிருஷ்ணன்தான். விளக்கு வெளிச்சத்துல கண்ணைக் கொட்டிப் பாத்தா அதுக்குள்ளே என் பையன மாட்டிவெச்சுட்டு ஓடிட்டான்.


அவ்வளவுதான். யசோதையின் பொறுமை போனது.
வாங்கடி எல்லாரும். தினம் தினம் ஒருத்தி வரீங்க. உன் பையனே வெண்ணெயை திருடுவான்., அதுக்கு என் பிள்ளை மேல் பழியா? நல்லா இருக்குடி உங்க நியாயம்..வீட்டுக்கு விளையாட வந்த குழந்தைக்கு ஒரு உருண்டை வெண்ணெய் குடுக்க துப்பில்ல. வந்துட்டா அங்கேர்ந்து பழி சொல்றதுக்கு.. நேத்திக்கே என் கண்ணன் சொன்னான், நீ அவன் மேல வேண்டாத பழியெல்லாம் போடறன்னு. இனிமே இந்தப்பக்கம் கண்ணன் மன்னன் னு சொல்லிண்டு வந்தியோ அவ்ளோதான்.


நிஜமாவே திருடினான்னு சொன்னா, அவனை கையோட பிடிச்சுண்டு வாங்கடி பாக்கலாம். பொழுது போறதுக்கு முன்னாடியே வந்து சமத்தா சாப்பிட்டுத் தூங்கற குழந்தையப் போய் பழி சொல்றாளாம். ரெண்டாம் ஜாமத்துல வந்தான்னு.


இவ்வளவையும் அம்மாவின் பின்னால் ஒளிந்திருந்து கேட்டுக்கொண்டிருந்த கள்ளன் கண்ணன், மெதுவாக புடவைத்தலைப்பிலிருந்து எட்டி அந்த கோபியைப் பார்த்து உதட்டைக் கோணி அழகு காண்பித்தான்.


புகார் சொல்ல வந்த கோபிக்குத் தலை சுற்ற ஆரம்பித்தது.

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37