உறங்கும் முன் - 3

வெண்ணெய்த் திருடன் இன்றும் வந்துவிடுவானே....

பாவம் அந்த கோபிகள்...


பூதம்


சரக் சரக் என்ற ஓசை... வளையல்களின் ஓசை மற்றும் காசும் பிறப்பும் கலகலப்ப கைபேர்த்து மத்தினால் ஓசைப்படுத்த தயிரைக் கடைந்து கொண்டிருந்தாள் யசோதை.

காசு, பிறப்பு என்பவை பெண்கள் கழுத்திலணியும் இருவகைத் தாலி. ஒன்று மஞ்சள் கயிற்றில் கோர்ப்பது, மற்றது தங்கத்தில்போடுவது.
ஆங்காங்கே மெலிதாக கோபியர் பாடும் இசை கேட்டுக் கொண்டிருந்தது. இன்னும் பொழுது புலரவில்லை.

கோபிகள் அனைவரும் மத்தின் இசைக்கேற்பக் கண்ணனின் நாமத்தைப் பாடிக்கொண்டே தயிர் கடைவார்கள்.
விடியற்காலையில் தயிர் கடயும் ஓசை மஹாலக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தமானது. கோகுலத்திலிருந்த அத்தனை வீடுகளிலுமே நீங்காத செல்வம் நிரம்பியிருந்த காரணமும் அதுவே.

எல்லோரும் கண்ணனின் நாமத்தைப் பாடிக்கொண்டு தயிர் கடைய இங்கே யசோதை மட்டும் ஒரு மந்திரம் சொல்லிக் கொண்டு கடைந்துகொண்டிருந்தாள்..

அது...
கண்ணன் வந்துடக்கூடாது.
கண்ணன் வந்துடக்கூடாது... அவன் வருவதற்குள் வெண்ணெய் திரண்டு வந்துடணும். இதோ ஆச்சு.
நன்றாய் தூங்கும் குழந்தை, மூன்றாம் கட்டில் சென்று தயிர் கடைந்தால்கூட, மெல்லிய ஓசை கேட்டாலும்கூட விழித்துக் கொள்வான்.
அவன் வந்தால் அவ்வளவுதான். வெண்ணெய் முழுதும் விழுங்கி விடுவான். புது வெண்ணெய் என்றால் உயிர் அவனுக்கு. எல்லாம் சரிதான்.
உடம்பு என்னத்துக்காவது?
ஒரு பானை வெண்ணெயை தூங்கி எழுந்ததும் விழுங்கினால் அஜீரணாமாகி விடாதா?

பலவாறு யோசித்துக் கொண்டு
கண்ணன் வந்துடக்கூடாது.
என்றே புலம்பிக்கொண்டு மூச்சிரைக்கக் கடைந்துகொண்டிருந்தாள்.

அதுதான், அதேதான், அந்தச் சத்தம்....
அந்தக் கள்ளனின் கொலுசு சத்தம்தான்.
வந்துவிட்டான்..வந்தேவிட்டானே...

அம்மா என்று ஓடி வந்து அவள் முதுகைக் கட்டிக்கொண்டான்.

இவ்வளவு சத்தத்திலும் அவனது கொலுசுச் சத்தம் கேட்டது அவளுக்கு..


யசோதையின் கன்னதோடு தன் கண்ணாடி போன்ற பட்டுக்கன்னத்தை வைத்து உரசிக்கொண்டே,
அவள் முதுகில் சாய்ந்து முன்னும் பின்னும் ஆடிக்கொண்டே எட்ட்ட்ட்டிப் பார்த்தான்

என்னம்மா செய்யற?

அதுவா....

எப்படிச் சமாளிப்பது?
வெண்ணெய் என்று சொன்னால், எனக்கு? என்று கேட்பானே.

இப்படி இப்படி இழுக்கிறேன் பாத்தயா

இழுத்தால் என்னம்மா வரும்?

இவ்வளவு நேரம் அழும்பு காட்டிய வெண்ணெய் இப்போது கண்ணனைப் பார்த்ததும் திரண்டு மேலே வந்தது..
சற்றுமுன் வந்திருக்கக்கூடாதா..
எல்லாம் அவனுக்கேற்றபடிதான் நடக்கிறது

அம்மா அம்மா
என்னம்மா இப்படி மேலே வருது?

அது...
அது....
பூதம்டா கண்ணா
நீ உள்ள ஓடிப்போயிடு.

அம்மா....
பூதமா...
என்றான்.


சடாலென்று பாய்ந்து இரண்டு கைகளால் அள்ளினான்.
கண்ணிமைக்கும் நேரத்தில் வாய்க்குள் போட்டு விழுங்கியாயிற்று.

என்னடா
பூதங்கறேன்.
முழுங்கற?

அம்மா அதனாலதான் முழுங்கினேன். அது உன்னைக் கடிச்சுதுன்னா நான் என்ன செய்வேம்மா
நீதானே என் அன்பான அம்மா
என்றானே பார்க்க வேண்டும்.

யசோதை அவனுக்கு அஜீரணமாகப் போகிறதே என்று கவலைப் பட்டுக்கொண்டு லேகியம் கிளறப் போனாள்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Post a Comment

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37