உறங்கும் முன் - 20
கோகுலத்தில் ஒரு வீடு விடாமல் நுழைந்து விஷமங்கள் செய்யும் கண்ணனை,
பெரிய பெரிய அசுரர்களுக்கும் கண நேரத்தில் முக்தி அளிக்கும் கண்ணனை,
நினைத்த மாத்திரத்தில் அக்ஷயமான ஐஸ்வரியங்களை அனுகிரஹிக்கும் கண்ணனை, கோபிகள் குழந்தையானது பொம்மையை ஆட்டி வைப்பது போல் ஆட்டி வைத்தனர். கோபிகள் எதைச் சொன்னாலும் அப்படியே கேட்கும் கண்ணனின் நீர்மையை எப்படிக் சொல்வது?
வெண்ணெய் நடனம்
தெருவில் விளையாடிக்கொண்டிருந்த கண்ணன் சட்டென்று ஒரு வீட்டினுள் நுழைந்தான்.
கண்ணனைக் கண்டதும் மிகவும் ஜாக்கிரதையான அந்த கோபி,
கண்ணா வா வா,
எங்க வந்த?
மாமீ இங்கதான் தெருவுல விளையாடிண்டிருந்தேன்.ஒரே தாகமா இருந்தது. அதான் வந்தேன் என்றான்.
அப்டியா? இங்க உக்காரு. வரேன்.
என்று அவள் சொன்னதும் சமர்த்தாக உட்கார்ந்து கொண்ட அவனைப் பார்த்துச் சிரித்த வண்ணம் உள்ளே சென்ற அந்த கோபி, திரும்பி வரும்போது, இன்னும் இரண்டு கோபிகளுடனும், வெண்ணெய்ப் பானை, முறுக்கு, சீடை, பக்ஷணங்களுடனும் வந்தாள்.
எல்லாரும் வந்து கண்ணனைச் சுற்றி உட்கார்ந்து கொண்டனர்.
நீரை வாங்கிக் குடித்த கண்ணனின் கண் அவர்கள் கொண்டு வந்தவைகளின் மீதே இருந்தது.
கண்ணா, நீ ரொம்ப அழகா இருக்க தெரியுமா?
மாமீ நான் நன்னா ஆடுவேனே, தானே முன்வந்து சொன்னான்.
அப்டியா?
எங்க ஆடு பாக்கலாம்.
ஆடினா எனக்கு என்ன தருவீங்க?
வெண்ணெய் தருவோமே
என்றதும்
மொதல்ல வெண்ணெய் தாங்க .
அப்றம் நீங்க பாடுங்க.. நான் ஆடறேன் சரியா?
என்றான்.
ஒரு உருண்டை வெண்ணெயை அவன் கையில் உருட்டி வைத்தாள்
ஒரு கோபி. இன்னொருத்தி
தையும் தத்தத் தையும் தா
என்று தாளம் போட்டதும்
ஒரு கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு, கையைக்காலை இங்குமங்கும் ஆட்டிவிட்டு
அவ்ளோதான்.
மாமீ வெண்ணெய்..
என்று கை நீட்டினான்.
என்னடா ஒரே ஒரு குதி குதிச்சுட்டு அவ்ளோதாங்கற.
நீங்க குடுத்த ஒரு உருண்டைக்கு அவ்ளோதான் மாமி. இன்னும் தாங்க. ஆடறேன்
என்றான்.
ஏற்கனவே கண்ணனின் அழகு, நெஞ்சைக் கொள்ளை கொள்வது. இதில் நடனம் வேறு ஆடினால்...
சரி இந்தா...
இன்னொரு உருண்டை வந்ததும் மறுபடி ஒரு குதி.
இப்படியாக ஒவ்வொரு உருண்டை வெண்ணெய்க்கும் ஒரே ஒரு குதி குதித்துவிட்டு சரியாப்போச்சு என்று சொல்லிவிட்டான்.
அடுத்தது..
மாமீ சீடை...
சரி சீடை வேணும்னா ..
இப்படி ரெண்டு அடி நட பாக்கலாம்.
நடந்தான். கொஞ்சம் சீடை கையில் வந்ததும், இப்படி நடந்தான். அவன் முன்னழகு, பின்னழகு, நடையழகு எல்லாவற்றிற்கும் பக்ஷணங்களோடு சேர்த்து உள்ளத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தனர் கோபியர்.
ஒரு வழியாக, கைகளில் முறுக்குகளை வளையல்கள் போலவும், ஜாங்க்ரியை கால்களிலும் மாட்டிக்கொண்டு
எல்லா பக்ஷணங்களும் வெண்ணெயும் தீர்ந்ததும்
நாளைக்கு வரேன் மாமி, இன்னும் நிறைய பண்ணி வைங்க
என்று சொல்லிவிட்டு ஓட்டம் பிடித்த கண்ணன் கோபியரின் கண்ணை விட்டு மறைந்தபோதும், அவர்கள் நெஞ்சை விட்டகலவில்லை.
ராகம் : ஸுத்த ஸாவேரி
தாளம் : ஆதி
பல்லவி
கண்ணன் நர்த்தனம் ஆடுகின்றான் - இங்கே || க ||
அனுபல்லவி
குண்டலங்கள் அசையக் கண்டவரெல்லாம் வியக்க
அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் || க ||
சரணம்
வெண்ணெய்க்காக அன்று ஆய்ச்சியர் முன் ஆடினான்
வேங்குழல் ஊதி வனிதையருடன் ஆடினான்
நாகத்தின் மேல்ஆடி அனைவரையும் காத்தான்
நாமதேவர் கீர்த்தனத்தில் தனை மறந்தாடினான்
மலையைக் குடையாய் எடுத்தாடி கோபர்களைக் காத்தான்
முரளீதரன் முன் ஸதா பஜனம் வேண்டி || க ||
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.
Comments
Post a Comment