உறங்கும் முன் - 12

இலையில் போட்டதெங்கே?


நான் கைந்து கோபிகள் கூடிவிட்டனர்.


வாடீ கல்யாணீ, எங்க உன்ன ரெண்டு நாளா காணோம்?


அடுத்த வாரம் நந்தலாலோட பிறந்தநாள் வருதே. அதுக்காக யசோதாம்மா உதவிக்கு வரச் சொன்னாங்க.


ஏற்பாடெல்லாம் முடிஞ்சுதா?
இல்லல்ல. உங்களையெல்லாம் பாத்துட்டு போலாம்னுதான் வந்தேன்.


அதானே. உன் வாய வெச்சுக்கிட்டு நீ வேலை செஞ்சா மாதிரிதான்..


கண்ணனைப்பத்தி சொல்லலாம்னு வந்தேன். வேணாம்னா எனக்கென்னவாம். நாம்போறேம்பா.. வேலை தலைக்குமேல கெடக்கு..


சரிடி. கோச்சுக்காத. சொல்லு சொல்லு. கண்ணனுக்கென்னவாம்?


ஒரு மாதிரி முறைத்துவிட்டு,
ரெண்டு நாள் முன்னால ச்ரவணம் வந்ததுல்ல..அன்னிக்கு என்னாச்சு தெரியுமா?
ஆரம்பித்தாள் கல்யாணி.


கேசவன் தெருவில் மெதுவாக நோட்டம் விட்டுக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தது யசோதை வீட்டு இளஞ்சிங்கம் .


ஆறாவது வீட்டைத் தாண்டும்போது, கம கமவென்று வெல்லப்பாகும் நெய்யும் சேர்ந்த வாசனை மூக்கைத் துளைத்தது.


சட்டென்று நின்றான். அது ப்ரியதமனின் வீடு. அவனொரு தொட்டாற்சிணுங்கி. வேண்டுமென்றே அவனை அழ விடுவதற்காக அவனோடு டூ காய் விடுவான் கண்ணன். இவனுக்குக் காரியம் ஆகவேண்டுமென்றால் பழம் விடுவான். இப்போது டூ காய் விட்டிருக்கும் காலம்.

என்ன செய்யலாம்? யோசிக்கும்போதே ப்ரியதமன் வீட்டினுள்ளேயிருந்து வந்தான். கிடுகிடுவென்று அவனருகில் சென்ற கண்ணன்,
ப்ரியதமா ப்ரியதமா இன்னிலேர்ந்து உன் கூட பழம் சரியா?
என்றான்.


கள்ளமற்ற அந்தக் குழந்தைக்கு ஒரே சந்தோஷம்.


கண்ணா என்று கட்டிப்பிடித்துக்கொண்டு நானும் பழம் என்றது. இனி விளையாட்டில் சேர்த்துக் கொள்வான். கண்ணனின் அணியில் சேர்ந்து விளையாடலாம். வெண்ணெய் திருடப் போகும்போது அழைத்துச் செல்வான். கண்ணனோடு இருப்பதென்றாலே கொண்டாட்டம்தான்.


அவனைக் குறுகுறுவென்று பார்த்த கண்ணன்,
இன்னிக்கு உங்க வீட்ல ஏதானும் விசேஷமாடா?


ஆமா கண்ணா. ச்ரவணமாம். அம்மா சாமிக்கு ஏதோ வேண்டிட்டு பண்ணிட்டிருக்காங்க என்றான்.


அப்பிச்சி வாசனை மூக்கத் துளைக்குதுடா..
பசிய தூண்டுதே. உங்கம்மா கிட்ட சொல்லி எனக்கும் தர சொல்றயா?


கண்டிப்பா கண்ணா. உனக்கில்லாமயா?


ப்ரியதமா, ச்ரவணம் ரொம்ப பெரிய விசேஷமாம். குளிச்சிட்டுதான் சாப்பிடணும்னு அம்மா சொல்லிருக்காங்க.. நான் நேத்திக்கே குளிச்சிட்டேன். நீ குளிச்சியாடா?


இல்லடா.


நதிலதான் குளிக்கணுமாம். நீ ஓட்டமா போய் குளிச்சிட்டு வரயா. ரெண்டுபேரும் சேந்து சாப்பிடுவோம்.


சரிடா, இப்படிங்கறதுக்குள்ள வரேன். நீ எங்கயும் போயிடாத. சரியா? என்றவாறு ஓடினான் அந்தச் சிறுவன்.


கண்ணன் வீட்டினுள் சென்றான்.

மாமீ மாமீ

யாரு, கண்ணன் குரலாட்டம் இருக்கே. வாடா கண்ணா வா வா வா.


என் பையனை விளையாட்டுல சேத்துக்கோயேன் கண்ணா. அவன் நேத்திக்கெல்லாம் கா விட்டுட்டயாம். அழுதுட்டே இருந்தான்


ஆகட்டும் மாமி. நான் பழம் விட்டுட்டேன். மாமீ இன்னிக்கென்ன விசேஷம்?


அதுவா, பெருமாளுக்கு வேண்டிட்டு, 12 ச்ரவணத்துக்கு பண்றமாத்ரி அக்காரவடிசல் பண்றேன்.


அப்டியா மாமீ, பூஜை ஆச்சா?


ஆச்சுடா கண்ணு.


எனக்குப் பசிக்கறது மாமீ. கொஞ்சம் தருவீங்களா?


கண்டிப்பா தரேனே.


ப்ரியதமன் வரட்டும் மாமீ சேந்து சாப்பிடறோம்.
சொல்லிவிட்டு, வயிறைக் குழையக் குழைய வைத்துக்கொண்டு, பரிதாபம் சொட்டும் முகத்துடன் பத்து முறை வாசலை எட்டி எட்டிப் பார்த்தான். இரண்டு முறை வாசலுக்குப் போய்ப் போய் வந்தான்.


அந்த கோபிக்கு கண்ணனைப் பார்க்கையில் மனமெல்லாம் கசிந்தது.
குழந்தை பசியால் வாடுகிறானே..
கண்ணா, ப்ரியதமன் எங்கன்னு தெரியல. நீ சாப்பிடேன். அவன் வந்தப்றம் அவனுக்கும் போடறேன்.


மாமீ அவன் நதிக்கு குளிக்கப் போயிருக்கான்.


அட ராமா யமுனை மூணுமைலாச்சே. அவன் வர ஒரு மணிநேரமாகுமே. உன்னால பசி தாங்க முடியாது. நீ சாப்பிடு கண்ணா.


சரி மாமீ. அவன விட்டுட்டு சாப்பிட எனக்கு மனசே இல்ல. இருந்தாலும் நீங்க சொல்றீங்களேன்னுதான் சாப்டறேன்.


புன்னகையோடு கண்ணனுக்கு ஒரு இலையைப் போட்டு ஒரு கரண்டி
அக்காரவடிசலைக் கொண்டுவந்து போட்டாள்.


மாமீ தொட்டுக்க?


மறந்துட்டேன் பாத்தியா? மாங்கா ஊறுகாய் போடவா?


சரி மாமி


உள்ளே போய் ஊறுகாயோடு வந்தால்....

இலையில் எதுவும் போட்ட சுவடே இல்லை.


என்ன மாமீ, ஊறுகா கொண்டுவரீங்க. அக்கரவடிசல் பண்ணலையா?


போட்டேனே கண்ணா


போடவேல்ல மாமீ. மறந்துட்டீங்க.


அப்டியா? ஒண்ணும் நியாபகமே இருக்கறதில்ல.
இந்த ஊறுகாய போட்டுட்டு போய் கொண்டு வரேன்.


உள்ளே போய் அக்காரவடிசலோடு வந்தால், இலையில் ஒன்றுமில்லை.

ஊறுகாய் எங்க கண்ணா?

மாமீ நீங்க போடவேல்ல.

கொண்டுவந்த பொங்கலைப் போட்டதும் மறுபடியும்,

திகட்டுமே மாமீ.. தொட்டுக்க?...


போனாள் வந்தாள்
போனாள் வந்தாள்
போனாள் வந்தாள்.
எத்தனை முறை நடந்தாளோ..
அந்தக் கண்ணனுக்கே வெளிச்சம்.
அக்கரவடிசலும் ஊறுகாயும் மாற்றிக் கொண்டுவந்தாள்.


கண்ணனோ போடவேயில்லை என்று சாதித்தான். இலையும் புதிதாகவே இருந்தது.


12 படி அரிசி போட்டு வெந்நீர்த்தவலை நிறையக் கிளறிவைத்திருந்த அக்கார வடிசல், அவள் கரண்டியை விட்டதும் டங்கென்று தவலையின் அடியில் இடித்த சத்தம் கேட்டது.


மாமீ ஊறுகா போட்டீங்க
அக்காரவடிசல் வரல என்று அவனது குரல் கேட்டதும் உரைத்தது அவளுக்கு.


ஆச்சுடா கண்ணா.
நான் கொண்டுவந்து போட்ட ஞாபகமா இருக்கு. ஆனா,
நீயோ போடவேல்லங்கற. அண்டா நிறயக் கிளறினேனே. எப்படிக் காலியாச்சுன்னே தெரியலடா..


நல்லா இருக்கு மாமீ சின்னக் குழந்தை நான். என்னோட குட்டி வயிறு ரொம்பக்கூட சமைச்சு போடத்தெரியல..
12 ச்ரவணத்துக்கு சேத்து பண்ணினதா சொல்றீங்க.
இதில சாப்பிடு சாப்பிடுங்கறீங்க.
இன்னமும் பசிக்குது. கொஞ்சம்கூட சாப்பிட்ட மாதிரியே இல்ல. என்னத்த சமைச்சீங்களோ....


என்று அவள் புடவைத் தலைப்பில் கையைத் துடைத்துவிட்டு வெளியேறும் நேரம், குளித்துவிட்டு உள்ளே வந்தான் ப்ரியதமன்.


அவனை ஏற இறங்கப் பார்த்த கள்ளக் கண்ணன்,
உங்கம்மா நல்லா சமைப்பாங்கன்ன.. அவங்களுக்கு அளவே தெரியல. அதான் நீ இப்டி ஒல்லியா இருக்க. இனி உம்பேச்சு டூ கா டா.


என்று கூறி விரலைக் காட்டிவிட்டு ஓடிவிட்டான். ப்ரியதமனும் அவன் தாயும் ஒன்றும் புரியாமல் நின்றனர்.


ப்ரியதமனோட அம்மா வந்து யசோதா கிட்ட சொல்லி ஒரே அழுகை.


சரி, அழாத. சாப்பிட்டுப் போன்னு சொல்லி, ரெண்டு பேருக்கும் சாப்பாடு போட்டு அனுப்பிட்டாங்கடி அந்த யசோதாம் மா.


சரி சரி. எனக்கு நேரமாச்சு. நாளைக்கு வரேண்டி.. என்று சொல்லி வேகமாய் நடந்தாள் கல்யாணி.

செந்நெல் அரிசி சிறுபருப்பும் செய்த
அக்காரம் நறுநெய் பாலால்
பன்னிரண்டு திருவோணம் அட்டேன்
பண்டுமிப்பிள்ளை பரிசறிவன்
இன்னம் உகப்பன் நானென்று சொல்லி
எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான்
உன் மகன் தன்னை அசோதை நங்காய்
கூவிக்கொள்ளாய் இவையும் சிலவே
- பெரியாழ்வார்

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

ஸ்ரீமத் பாகவத ஸாகரத்தினின்று சில ரத்தினங்கள்..(1)

உறங்கும் முன்... - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37