உறங்கும் முன் - 4
இன்னிக்கும் அந்த வெண்னெய்க் கள்ளன் வந்துட்டான்னா என்ன பண்றது?
சிறுபேர்
லதா, லலிதா, சித்ரா, விசாகா, வித்யா,ஸுதேவி, ரங்கா எல்லோரும் வந்தாயிற்று.
சந்த்ரா எங்கேடி காணோம்?
ராதா கேட்டாள்.
தேவீ, சாயங்காலம் நதிக்கரையில் விளையாடப் போகலாம் னு அவகிட்ட சொன்னியா இல்லையா?
நா சொல்லி யாச்சுப்பா, அவ அம்மாவும் அனுப்பறேன்னுதான் சொன்னா.
அவங்க வீட்டுல ஏதோ விசேஷம்போல. புது பட்டுப்பாவாடையெல்லாம் போட்டுண்டிருந்தா.
அப்டியா?
சரி அவ வரட்டும் விடு.
அதுவரைக்கும் ஏதாவது விளையாடலாம்.
ஏய். அதோ சந்த்ரா வரா பார்
சந்த்ரா அழுதழுது வீங்கிய கன்னங்களுடனும், மை கரைந்த கண்களுடனும் வந்து சேர்ந்தாள். தங்கம் போல் மினுமினுக்கும் அவள் முகம் சிவந்திருந்தது.
அவளை அந்தக் கோலத்தில் பார்த்ததும் அதிர்ச்சியுற்று அனைவரும் சூழ்ந்து கொண்டனர்.
ஏய் சந்திராவளி, என்னாச்சுடி, ஏன் அழுதுண்டே வர?
சொல்லுடி
அழுதழுது கேவல் நிற்காமல், இப்போது கேட்கப்பட்டதும் மறுபடி அழ ஆரம்பித்தாள்.
ராதா சொன்னாள்.
ஏய் நிறுத்தடி.
என்னாச்சு? சொல்லிட்டு அழு.
கேவிக்கொண்டே
இந்தக் கண்ணன் இல்ல...
கண்ணனா அவன் எப்பவும் இருக்கறவண்டி..
என்ன ஆச்சு அவனுக்கு? பதறினாள் ராதா
போடீ, அவனுக்கொண்ணும் ஆகல.
எங்க வீட்டில இன்னிக்கு என் சின்னத்தம்பிக்கு பொறந்தநாள்னு அம்மா பாயசம் வெச்சு, எனக்கும் அவனுக்கும் புதுசு போட்டுவிட்டாங்க.
அவனுக்கு பொறந்தநாளைக்கு உனக்கெதுக்குடீ புதுசு போட்டாங்க?
ஒருத்தி கேட்டாள்.
நான் அப்பா செல்லம் ல. அதனால அப்பா எனக்கும் வாங்கிட்டு வந்தாரு.
நல்லா பெரிய ஜரிகை போட்டு மயில்கழுத்து நிறத்துல. அழகா இருந்திச்சு.
அம்மா அதே நிறத்தில வளையல் ஜிமிக்கி, மாலை எல்லாம் போட்டு விட்டிருந்தாங்க.
அதுக்கேண்டி அழுத? அந்தப் பாவாடை எங்க? நாங்க பாக்க வேணாமா?
நான் அதைப் போட்டுகிட்டு வாசல்ல திண்ணைல உக்காந்திருக்கும் போது, அந்தக் கண்ணன் வந்தாண்டி..
இவ பொய் சொல்றாடி, புது பட்டுப் பாவாடைய இவளே கண்ணன்கிட்ட காமிக்கலாம்னு போயிருப்பா.
போடீ, அவன்கிட்ட இதோ பாரு கண்ணா புது பாவாடை, னு காமிச்சேனா?
அழகா இருக்கே...
எங்க
ரெண்டு கையாலும் பிடிச்சுண்டு இப்படி சுத்து, பாக்கலாம் குடை மாதிரி அழகா விரியும் னான்.
அவம்பேச்சை நம்பி சுத்தினேனா...
என்னாச்சு, முழுசா சொல்லுடி..
ரெண்டு கையாலும் சகதி மண்ணை எடுத்து பாவாடை முழுக்க போட்டுட்டு ஓடிட்டான்.
அம்மா கிட்ட நல்லா திட்டும் அடியும் வாங்கிண்டு வந்தேன்.
எல்லோருக்கும் கோபம் வந்தது.
ரொம்ப அழகா இருக்கான் னு அவன் கிட்ட பேசப் போனா, தினம் யாரையாவது அழ விடறான். அவனை எப்படியாவது இன்னிக்கு அழப் பண்ணணுண்டி..
ஆமா ஆமா
எல்லோரும் சேர்ந்து கூக்குரலிட.. ராதா சற்று யோசித்தாள்.
தூரத்தில் நந்தபாலன் தனியாக வந்து கொண்டிருந்தான்.
தலையில் ஒரு பச்சை நிற முண்டாசு, அதற்கு மேல் மயிலிறகு, காது வரை நீண்ட கண்கள், அங்குமிங்கும் அலையும் விழிகள், கழுத்தை ஒட்டிய முத்துமாலை, காதில் குண்டலம், மஞ்சள் பட்டாடை, சிவப்பு சுற்று வஸ்திரம் காற்றில் படபடத்தது, கைகளில் கங்கணங்கள்.
அவன் இதழருந்தும் புல்லாங்குழல் இப்போது இடுப்பைத் தடவிக் கொண்டிருந்தது.
முழங்கால் வரை பட்டை ஏற்றிக் கட்டியிருந்தான்.
கால்களில் தண்டை, மணலில் நடப்பதால் சத்தம் போடாமல் இருந்தன.
வெகு ஒயிலான நடை.
கையில் ஒரு தாமரைப்பூவைச் சுழற்றிக்கொண்டு வந்தான்.
வந்துட்டாண்டி
அவனைப் பத்தி பேசினாலே மூக்கு வேர்த்துடுமோ
உடனே வந்துடறான்.
அவனை பாக்காதடி. நம்ம கோவமெல்லாம் போயிடும்.
யாரும் அவனைப் பாத்து சிரிக்கக்கூடாது..
தனியா வராண்டி.
இன்னிக்கு எப்படியும் அழ விடணும் அவனை.
அவன் நாம் என்ன திட்டினாலும் அழகா சிரிச்சுட்டு போயிடுவாண்டி.
அதோட நம்ம கோவமெல்லாம் காணாப்போயிடும்.
இதில எப்படி அழ விடறதாம்
அவனைத் திட்டவெல்லாம் கூடாதுடீ என்ற ராதா
நான் ஒண்ணு சொல்றேன் காதைக் குடுங்கடீ என்றாள்.
எல்லோரும் அருகில் வர, ஏதோ கிசுகிசுத்தாள்.
அப்டியா
அப்டி சொன்னா அழுவானாடீ.
கண்டிப்பா அழுதுடுவான்.
பாக்கலாமா?
வரான்...வரான்...
கிட்ட வந்துட்டாண்டி.
எல்லாரும் சேர்ந்து ஒண்ணா
ம்ம்..ஆகட்டும்..
ராதை குரல் கொடுக்க..
எல்லோரும் சட்டென்று அரை வட்டமாக மணலில் முட்டி போட்டுக்கொண்டு, இரண்டு கைகளையும் உயரத் தூக்கி,
ஒரே குரலில்,
ஹே வைகுண்டபதே!
வேதமூர்த்தே!
பரம்பொருளே!
ஸர்வ வ்யாபியாய் இருப்பவனே!
கருணைக்கடலே!
எங்களைக் காப்பாற்று என்று சத்தமாகக் கூறிக்கொண்டு நமஸ்காரம் செய்தனர்.
அவ்வளவுதான்..
கண்ணன் அப்படியே மணலில் உட்கார்ந்து கொண்டு, ஓவென்று அழ ஆரம்பித்தான்...
என்னை ஏன் எப்படி எப்படியோ கூப்பிடறீங்கடி, என்னை கோபாலா, வெண்ணெய்த் திருடா, கண்ணா னு கூப்பிடாம இப்படியெல்லாம் யார் உங்கள கூப்பிட சொன்னா.
இதுக்கு நான் இங்க(பூமிக்கு) வந்திருக்கவே மாட்டேனே.
என்று அரற்றிக்கொண்டு, பின் எழுந்தான்.
அவன் அழுவதைப் பார்த்த குட்டி கோபிகளுக்கு மனம் தாங்கவில்லை.
சரிடா, சரிடா, இனிமே கூப்பிடல. அழாதடா, என்றதும், கண்ணைத் துடைத்துக் கொண்டு,
ஏய் சந்திரா! நாளைக்கு உங்க வீட்டுக்குதான் வருவேன்.
பாயசம் தராம பாவடைய மட்டும் காமிச்சியில்ல. நாளைக்கு எனக்குன்னு பாசயம் பண்ணி வெக்க சொல்லு உங்கம்மாவ.
என்று கூறிக்கொண்டு ஓடிவிட்டான்.
அனைவரையும் கரையேற்ற எளிமையாக அவதாரம் செய்த கண்ணனுக்கு வைகுண்டபதே! பரம்பொருளே! என்பதெல்லாம் சிறு பெயர்களாகிப் போனது.
சிறுபேரழைத்தனவும் சீறியருளாதே- ஆண்டாள்.
மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே...
This comment has been removed by the author.
ReplyDelete