உறங்கும் முன் - 15

விடுவிக்க வந்தவன் செய்த வம்பு

ரெண்டு நாள் முன்னால கோழி கூவறதுக்கு முன்னாடியே வந்து எல்லாக்‌ கன்னுக்குட்டியையும் அவிழ்த்துவிட்டுட்டான். ஒண்ணையும் பிடிக்க முடியல.
ஏண்டா இப்படி செய்யறன்னு கேட்டா நான் (ஸம்ஸாரத்திலிருந்து) அவிழ்த்துவிடத்தானே மாமி வந்திருக்கேங்கறான்.
ஒண்ணும் புரியல. 
சரி. போனாப் போட்டும் விட்டா, இன்னிக்கி காலைல என்ன பண்ணினான் தெரியுமா?

கிட்டத்தட்ட அந்த கோபி  அழுதுவிடுவாள் போலிருந்தது. 

சொல்லு கமலா..

விடியறதுக்குள்ள இன்னிக்கும் வந்தான். நான் அதுக்குள்ள கன்னுக் குட்டியெல்லாம் ஊட்ட விட்டுருந்தேனா...
இவனும் போய் ஒரு மாட்டுக் கிட்ட ஊட்ட ஆரம்பிச்சுட்டான்.
நான் ஒவ்வொரு கன்னா இழுத்துக் கட்டிட்டு கடைசில இவன் கிட்ட வந்தேன். ஒரே இருட்டு. கண்ணு தெரியல.
உன் பிள்ளை வேற கருப்பு.
எப்படித் தெரியும்?

ஏய்... உன்னை இவ்ளோ நேரம் பேச விட்டதே தப்பு. 

அவனை சொல்லும்போதே இவ்ளோ கோவம் வருதே. என்னை சாணில தள்ளிவிட்டுட்டானே. எனக்கெவ்ளோ கோவம் வரும்?

அப்போதுதான் யசோதை கவனித்தாள். கழுவிய பிறகும் போகாமல் கமலாவின் மீது ஆங்கங்கே சாணி ஒட்டி க் கொண்டிருந்தது.

அவளது கோபத்தைப் பார்த்து சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்டாள்

என்ன சொல்ற நீ? தள்ளிவிட்டானா?

ஆமாம்.
கன்னுக்குட்டிக்கு பதிலா இவன் ஊட்டிண்டிருந்தான். இருட்டுல எனக்குத் தெரியல. 
கழுத்துக் கயத்தைத் தேடினா கிடைக்கல. இழுக்கப் பிடிமானம் இல்லன்னு தேடினா அவன் அரணாக்கயிறுதான் கிடைச்சது. 
இழுத்துப் பாத்தேன். இவன் விடாம ஊட்டிண்டே இருந்தான். கன்னுக்குட்டி  வரமாட்டேங்கறதேன்னு பலமா இழுத்த்தேன். இடுப்பில இருந்த அரணாக்கயத்தை அவிழ்த்து விட்டுட்டான்.
பலமா இழுக்கும்பொது அவன் கயத்தை அவிழ்த்து விட்டதால, வேகமா பின்னால இருந்த சாணிக்குழிக்குள்ள விழுந்துட்டேன்.
இனிமே இப்படியெல்லாம் செய்தா அவ்ளோதான். உன் பிள்ளையக் கண்டிச்சு வை யசோதா
என்றாள்.

இவ்வளவு நேரம் பொறுமையாய் சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்த யசோதா கலகலவென்று சிரித்தாள்..

என்ன யசோதா சிரிக்கற? நான் விழுந்தது உனக்கு சிரிப்பா?
பிள்ளைக்கேத்த அம்மாதான்.
என்று கழுத்தை நொடித்தாள்.

அவ்வளவுதான். அவளை யசோதா பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டாள்.

ஏண்டி, உனக்கென்ன எதுக்கெடுத்தாலும்  கண்ணனத்தான் சொல்லணுமா? 
குழந்தை பாவம். இன்னும் எழக்கூட இல்ல. போது விடியறதுக்குள்ள வந்தாங்கற.. நீயா தூக்கக்கலக்கத்தில விளக்கெடுக்காம இருட்டுல போய் விழுந்துட்டு, ஊருக்கிளைச்சவன்னு என் பிள்ளய சொல்றயோ?
கண்ணன் உள்ள தூங்கறான். இப்ப கூப்பிடறேன் பார்.. வந்தது அவனான்னு நீயே பாத்துக்கோ என்று சொல்லி
உள்ளே திரும்பி
கண்ணா, கண்ணா...
என்று அழைத்தாள்.

தூக்கம் மாறாத கண்களோடு, கண்ணைக் கசக்கிக் கொண்டு,
படுக்கையிலிருந்து குழந்தை எழுந்து வருவதுபோல, அம்மா என்று அழுதுகொண்டே தளர்நடை நடந்து வந்த கண்ணனைப் பார்த்ததும் பேச்சற்றுப்போனாள் கமலா. தாய்க்குத் தெரியாமல்,  அவளைப் பார்த்து 
பழிப்பு காட்டிவிட்டு அம்மா தூக்கு என்று  யசோதையின் கால்களைக் கட்டிக் கொண்டான் கண்ணன்.
கமலா மயங்கி விழுந்தாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37