உறங்கும் முன் - 11
கற்பனைக்கெட்டாத அழகு
தோழிகள் எல்லாரும் வந்துவிட்டனர்.
இன்று கண்ணனை வரவேற்பதற்கும் அவனோடு விளையாடவும் எதிர்பார்த்திருக்க, நந்தனும், யசோதையும் குட்டிக்கண்ணனும் பர்சானா வந்தனர்.
ராதைக்கும் கலாவதிக்கும் கொண்டுவந்த பரிசுப்பொருள்களைக் கொடுத்தபின், கண்ணனின் பிறந்தநாள் அழைப்பும் விடுக்கப்பட்டது.
வ்ருஷபானுவும், நந்தனும் கம்சனால் அடிக்கடி ஏற்படும் ஆபத்துக்களையும், பாதுகாப்பையும் பற்றிப் பேசத் துவங்க, யசோதையும் கலாவதியும் தத்தம் குழந்தகளின் குறும்புகளை அளவளாவ, கண்ணனின் விழிகளோ ராதாவைத் தேடின.
யசோதையிடம் பரிசுப்பொருளைப் பெற்றுக்கொண்டு உள்ளே சென்று தோழிகளுடன் ஒளிந்து நின்று கண்ணனைக் கண்களால் பருகிக்கொண்டிருந்தாளவள்.
அவன் தேடுவதைப் பார்த்ததும், லலிதா என்ற குட்டி கோபி வந்தாள். கண்ணா நாம் மாடியில் சென்று விளையாடலாம் வா என்று அழைத்துச் சென்றாள்.
மடிந்து மடிந்து செல்லும் மாடிப்படியின் வழியில் உத்திரம் முதல் தரை வரையிலும் ஒரு சுவர் முழுவதும் கண்ணாடி பதிக்கப் பட்டிருந்தது.
குட்டிக் கண்ணனுக்கு அது கண்ணாடி என்று தெரியவில்லை..
தன் பிம்பத்தைப் பார்த்து வியந்தவனாய் ராதே ராதே என்று கூக்குரலிட்டான்.
வேகமாய் ஓடி வந்த ராதாவிடம்
ராதா, இந்தப் பையன் யார்?
இவன் மிகவும் அழகாய் இருக்கிறானே..
இவன் என்னைப்போலவே எல்லாம் செய்கிறான்
என்று கைகளை ஆட்டினான்.
(கோயம் ராதே ஸுகுமார:?)
கண்ணன் சொன்தைக் கேட்டதும் கலீர் என்று சிரித்தனர் கோபிகள்.
கண்ணா கேலி செய்யறயா?
உனக்கு நிஜமாகவே இந்தப் பையன் யார்னு தெரியலியா? என்றாள் ராதா.
இல்ல ராதா, இவன் யார்? இவன் ரொம்ப அழகு. இவனைப் பாரேன். இவனை உனக்குத் தெரியுமா?
(சரீரம் தானென்றறிந்திராத ப்ரும்ம வஸ்து, ஒன்றுமறியாத குழந்தை இரண்டும் கொள்ளலாம்)
நிஜமாகவே அவன் உணரவில்லை என்றுணர்ந்த ராதா
நீதான் கண்ணா அது. இப்போது என்னையும் பார். இது கண்ணாடி என்று கண்ணனின் அருகில் நின்றாள்.
கண்ணாடியில் இருவரையும் பார்த்ததும் சிரித்து விட்டான்.
எனக்கு தெரியவேல்ல பாரேன். ஆமாம் நானா? இவ்ளோ அழகா என்ன?
தன்னைத் தொட்டுப் பார்த்துக்கொண்டே கண்ணாடியைப் பார்த்தான்.
ஆமாம் கண்ணா நீயேதான்.
உன் அழகு உனக்கே மயக்கம் தருதோ என்று கேலி செய்தவாறு அவனை அழைத்துச் சென்றாள் ராதா.
பல்லவி
எத்துணை அழகு நீதான் கண்ணா!
இத்துணை அழகுனக்கு யார் தந்தது? ( எ )
அனுபல்லவி
ரதிபதியை ஒரு கணத்தில் பொசுக்கிய
பசுபதியும் தன் வசமிழந்தான் உன் அழகில் ( எ )
சரணம்
அழகெல்லாம் திரண்டு உன் உருவானதோ
சொல் துணை வராத அழகு உன் அழகு
உனக்கே மயக்கம் தருவது உன் அழகு
எனக்கு உன் அழகு ஒன்றே போதும் (எ)
- மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி
Comments
Post a Comment