உறங்கும் முன் - 10

பரப்ரும்மம் சுமந்த பாதுகை


அடுத்த வாரம் வரப்போகும் குட்டிக் கண்ணனின் பிறந்த நாளுக்காக அக்கம் பக்கத்து சிற்றரசர்களுக்கும், பொறுப்பிலுள்ள அதிகாரிகளுக்கும், உறவினர்களுக்கும் அழைப்போலைகள் தயாராகிக்கொண்டிருந்தன.


உள்ளேயிருந்து வந்த யசோதை கேட்டாள்,
பர்சானாவுக்கு அழைப்பு அனுப்பியாச்சா?


இதோ இப்போது அனுப்பப் போகிறேன்.


ஆளை அனுப்பாதீங்க. நாமே போய் வரலாம். எனக்கும் கலாவையும் குட்டிப் பெண் ராதாவையும் பாக்கணும்போல் இருக்கு என்றாள்.


அதுக்கென்ன? போலாமே. காலையில் நதிக்கரைக் காவலைப் பார்த்துட்டு வரேன். சாப்பிட்டுக் கிளம்புவோம். நாம் வரோம்னு என்று சேதி அனுப்பிடறேன். இல்லன்னா வ்ருஷபானு ஏதாவது வேலையா போயிடுவார் என்றான் நந்தன்.


இருவரும் பேசிக்கொண்டே வாசல் வரை வந்துவிட்டனர். நந்தனின் பாதுகை உள்ரேழியில் இருந்தது. அடடா, காலணியம றந்துட்டேனே என்று திரும்பினான்.

அங்கே...

யாருடைய பாதத்தை மஹலக்ஷ்மி ஆச்ரயித்திருக்கிறாளோ, மூவுலகையும் அளந்தவன் எவனோ, மந்தர மலையைத் தாங்கியவன் எவனோ, முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் தலைவன் எவனோ, அந்த பரப்ரும்மம் நந்தனின் பாதுகையைத் தலைமேல் ஆம், தலைமேல் வைத்துச் சுமந்துகொண்டு, அதன் பாரத்தால் நடக்க முடியாமல் தள்ளாடிக்கொண்டு ததகா பிதகா வென அடிகளை வைத்து நடந்து வந்தது.


எதிர்பார்க்கவில்லை இதை நந்தன்‌.
பேச்சற்று அப்படியே நின்றான்.


பதறிப்போன யசோதை குழந்தை கொண்டு வந்து தரானே. மச மசன்னு நிக்காம வாங்கிப் போட்டுக்கோங்க என்றாள்.


சட்டேன்று தன் பாதுகையை வாங்கிக் கீழே போட்டுவிட்டு, குட்டிக் கண்ணனை கட்டியணைத்து உச்சி மோந்து, முத்தமிட்டுவிட்டு,
மத்யானம் வெளில போலாம். சாப்பிட்டு சமத்தா நீயும் அம்மாவும் தயாரா இருக்கணும் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.


ஏற்கனவே வசுதேவரின் சூசனையினாலும், பெயர் வைக்கும்போது கர்காச்சாரியார் சொன்னதாலும் இறைவன்தான் தன் வீட்டில் பிறந்திருக்கிறான் என்று நந்தனின் மனதின் ஓரத்தில் அவ்வப்போது தோன்றிக்கொண்டுதான் இருந்தது.


கண்ணன் பாதுகையை சும்மா எடுத்து வந்திருக்கலாம். தலைமேல் வைத்துக் கொண்டு வந்தானே என்று அதே காட்சியை மறுபடி மறுபடித் தன் பணிகளுக்கு நடுவிலும் நினைத்துக்கொண்டே இருந்தான் நந்தன்.


#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37