உறங்கும் முன் - 9
வெண்ணெய் வசூல்
நேற்று வெண்ணெய் தருகிறேன் என்று வாக்குக் கொடுத்து விட்டிருந்ததால், இன்று நந்தபாலன் நிச்சயம் வருவான் என்று தெரியும்.
எனவே, காலையில் கடைந்த புது வெண்ணெயில் சிறு பகுதியை கண்ணனுக்கென்று எடுத்துவைத்தாள் விமலா.
பாவம், நேத்திக்கி நாங்க அஞ்சு பேரும் ஆளுக்கொரு சேர், எப்படியும் 150 மஞ்சள் கிழங்கு களுக்கு மேல் இருக்கும். எல்லாத்தையும் தேய்க்கற வரைக்கும் பொறுமையா குனிஞ்சு காமிச்சிண்டிருந்தான். பாக்க பாவமா இருந்தது. வேணாம்டின்னா இந்த கமலாதான் கேக்கவேயில்ல.
கண்ணன் நமக்காக வருவாண்டின்னு சொன்னா.
இவ்ளோ நேரமாச்சு. இன்னும் குட்டிப்பையன காணோமே.
நினைக்கும்போதே சலங்கை சத்தம் கேட்டது.
நூறாயுசுக்கும் சௌக்யமா இருப்பான்.
வாடா கண்ணா,
ஐ, ரொம்ப அழகா இருக்கியே. இதேது இடுப்புல. புல்லாங்குழலெல்லாம் வாசிப்பியா நீ?
அது நேத்திக்கு அப்பா வாங்கித் தந்தது.
பேசிப் பேசி ஏமாத்தாம என் வெண்ணெயை எடுங்க....
தெரியுண்டா, உன்ன ஏமாத்த முடியுமா? உனக்குன்னு எடுத்து வெச்சிருக்கேனே. இரு கொண்டு வரேன்.
ஒரு எலுமிச்சம் பழம் அளவு வெண்ணெயை உருட்டிக்கொண்டு வந்தாள்.
படுகோபம் வந்தது கண்ணனுக்கு.
பட்டென்று வாங்கி வாயில் போட்டுக்கொண்டு சொன்னான்.
இத்துனூண்டு கோலி குண்டு அளவு வெண்ணெய்க்கா அவ்ளோ நேரம் குனிஞ்சேன். எப்டி முதுகு வலிச்சது தெரியுமா?
கோலிக்குண்டா, நிறையதாண்டா தந்தேன்.
அதெல்லாம் கிடையாது. இன்னும் பெரிய்ய்ய உருண்டையா கொண்டு வாங்க..
உள்ளே போய் இன்னும் சற்று பெரிய ஆப்பிள் அளவுக்கு உருட்டி எடுத்து வந்தாள்.
சரேலென்று பாய்ந்து வாங்கி அதையும் விழுங்கினான்.
நல்லா இருக்கு நீங்க செய்யறது.
நேத்திக்கு எவ்ளோ நேரம் வேலை வாங்கினீங்க. வெண்ணெய் மட்டும் தாராளமா கைல வராதோ? என்றான்.
அந்த கோபி இதென்ன சோதனை என்று நினைத்துக் கொண்டு
பின்ன எவ்ளோதான் வேணும் உனக்கு
என்றாள்.
ஒரு சின்ன உருண்டையா இவ்ளோ அளவு கொண்டாங்க போதும்
என்று ஒரு கால் பந்து அளவிற்கு கையை விரித்தான்.
டேய்.. இதெல்லாம் சரியில்லை. உன் அம்மாகிட்டயே சொல்லுவேன் என்றாள்.
அம்மாகிட்டதானே. நல்லா சொல்லுங்க. நானும் நீங்க மஞ்சள் தேய்ச்ச என் முதுகை அம்மாகிட்ட காட்டுவேன் என்றான்.
இவன் பொய் சொன்னாலே யசோதை நம்புவாள்.மஞ்சளைத் தேய்த்தது நிஜம்.
முதுகை வேறு காண்பித்தால் தன்னையும் மற்ற கோபிகளையும் தொலைத்துக் கட்டிவிடுவாள் அந்த யசோதா என்று உரைத்தது விமலாவுக்கு.வேறு வழியின்றி, இவனோடு வீண் வம்பு வேண்டாம் என்று வெண்ணெயைப் பானையோடு கொண்டு வந்து வைத்து,
பரவால்ல. முழுசா எடுத்துக்கோ
என்றாள்.
எனக்கு நியாயமா என் பங்கைக் கொடுத்தா போதும். எங்க வீட்ல வெண்ணெய் இல்லையா என்ன
என்று கழுத்தை நொடித்து விட்டு, பானையிலிருந்த எல்லா வெண்ணெயையும் ஒரே உருண்டையாகத் திரட்டி, விழுங்கிவிட்டு, கையை விமலாவின் புடைவையிலேயே துடைத்துவிட்டு, இன்னொரு கோபியின் வீட்டுக்கு வெண்ணெய் வசூலுக்குக் கிளம்பினான் குட்டி கோபாலனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே நின்றாள் அந்த கோபி.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
படிக்க படிக்க பரவசமா இருக்கு கண்ணனின் லீலைகளை. வாய்ப்பு கிடைத்தால் அத்தனையையும் திரட்டி புத்தகமாய் இடுங்கள்.
ReplyDelete