உறங்கும் முன் -7

யாரோ இவள் யாரோ?


சனிக் கிழமையாதலால், வெண்ணெய்ப் பானையைக் காட்டி காட்டி, குட்டிக் கண்ணனை எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டினாள் யசோதா. அடர்த்தியான கேசத்தை ஈரம் போகத் துடைத்து, சாம்பிராணி போட்டு, ஒரு சிறிய உருண்டை லேகியத்தை வாயில் அடைத்தபின், முதல் பசிக்கு கொஞ்சம் வெண்ணெயும் கொடுத்தாள்.


கண்ணா வா, உனக்கு அலங்காரம் செய்கிறேன் என்று உடைகள் இருக்கும் அறைக்கு அழைத்துப் போனாள். அலங்காரப்ரியன் அந்த உள்ளத் திருடன். விதம் விதமாய், அழகழகாய், புதிது புதிதாய் பெரிய ஜரிகைகளும் வேலைப்பாடுகளும் செய்த ஆடைகளை விரும்பி அணிவான்.


அலமாரியிலிருந்து பெரிய கரை போட்ட வாடாமல்லி நிறப்பட்டை எடுத்தாள்.


அம்மா...
அந்த அலமாரியைத் திறக்கமாட்டியா?
அதுக்குள்ள என்ன இருக்கு?


அறையின் ஓரத்தில் பூட்டப்பட்டிருந்த அலமாரியைக் காட்டிக் கேட்டான்.


அதுவா...
அது வேண்டாம்டா..


என்னம்மா வெச்சிருக்க அதுள்ள.. திறந்து காட்டு.


அவன் அடம் பிடிக்கவே, திறந்தாள்.
அது முழுவதும் பெண் குழந்தைக்கான பாவாடை, சட்டைகள், நகைகள் நிரம்பியிருந்தன..


அம்மா இதெல்லாம் என்ன?


இல்லடா.. நீ என் வயத்தில் இருக்கும்போது ஜோசியர் பெண் குழந்தை பிறக்கும்னார். அதுக்காக வாங்கினேன். ஆனா நீதான் சிங்கக்குட்டியா வந்து பொறந்துட்டியே. இதெல்லாம் எதுக்குன்னுதான்..


அம்மா
இதெல்லாம் ரொம்ப அழகா இருக்கு. நான் பையனா இருந்தா என்ன? எனக்கே போட்டுவிடு..


யசோதைக்கும் ஆசைதான்.

சரி இன்னிக்கு உன்ன குட்டிபொண்ணாக்கிடலாமா?


என்று கேட்டுக்கொண்டே,
அலங்கரிக்க ஆரம்பித்தாள்.
கல் வேலைப்படுகள் செய்த நீலநிறப்பட்டுப்பாவடை, சட்டை அணிவித்தாள்.
கண்ணனோ மிகவும் பொறுமையாக ஆசையாக காண்பித்தான்.
தலையை நன்கு இழுத்து வாரி ராக்கொடி, உச்சிப்பூவெல்லாம் வைத்து, 7 கால் பின்னல் போட்டு, குஞ்சலம் கட்டி, சந்த்ரப்ரபை, சூர்யப்ரபை, ஜடைவில்லை, திருகு எல்லாம் வைத்து, மல்லிகைச்சரமும் வைத்தாள்.
கண்களுக்கு மை தீட்டி, புருவத்தைச் சுற்றிப் பொட்டுக்கள் வைத்து, ஜிமிக்கி, புல்லாக்கு, மாட்டல், அட்டிகை, முத்து மாலை, ஒட்டியாணம், வங்கி, விதம் விதமான வளையல்கள், காலில் சதங்கை.


ஆயிற்று. கண்ணனை இல்லையில்லை கண்ணம்மாவை முழு நிலைக் கண்ணாடியில் காண்பித்தால் அவனுக்கே அவனை அடையாளம் தெரியவில்லை.


யாரும்மா இந்தப் பொண்ணு? என்றான்


நீதாண்டா..

.

அப்ப்டியா? நானா?
அம்மா.. நான் இப்படியே கொஞ்சம் வெளில சுத்திட்டு வரேன். நீ யாரிடமும் சொல்லாதே. சரியா?


என்றவ(னை)ளை அழைத்து, சின்னதாக த்ருஷ்டிப் பொட்டு வைத்து விட்டு வேலையைப் பார்க்கப்போனாள்.


அதன் பிறகு அவன் சுற்றிய கதையும், ஊரிலுள்ளோர் அவள்(ன்) பின்னால் அலைந்த கதையும் நீங்கள் அறிவீர்கள் தானே?


ஒவ்வொரு கோபியாக அந்தக் குட்டிப் பெண்ணை மாற்றி மாற்றிக் கேள்வி கேட்டும் சிரிப்புதான் பதிலாக வந்தது.
ஒரு வழியாக எல்லாரும் வந்தாயிற்றா என்று நோட்டம் விட்ட அந்தக் குட்டி கடைசியாக நந்தன் அரண்மனையின் வாயிலில் உள்ள திண்ணையில் அமர்ந்தாள்.


ஏ பொண்ணே!
நீ யாருன்னு தான் சொல்லேன்.


யார் வீட்டுக்கு வந்திருக்க?


நீ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா?


உள்ள போய் யசோதாம்மாவ கூட்டிக்கிட்டு வரேன் இரு. உன்னப் பாத்தா மருமகளாக்கிப்பாங்க..


உன் பேரென்ன?
தன் செப்பு வாயைத் திறந்து சொன்னாள்.
என் பேர் கண்ணம்மா. நான் கண்ணனுக்கு அத்தை மகள்.


யார் கிட்ட கதை விடற?
உன்ன மாதிரி அத்தை பொண்ணு இருக்கறதா கண்ணன் சொன்னதேயில்லையே.


விடுறி. கண்ணன் அப்படியே எல்லத்தையும் சொல்றவனோ? உன் கன்னத்தில அழகா குழி விழுது...


எப்போ வந்தே நீ? உன்ன கண்ணன் பாத்தானா.. அவன் பாத்தா விடவே மாட்டான்.


மாற்றி மாற்றிச் சொல்ல இதையெல்லாம் கேட்டுப் பழக்கமில்லாத கண்ணம்மாவுக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.


சட்டென்று பாவாடையைத் தூக்கி முகத்தை மூடிக்கொண்டாள்.


அவ்வளவுதான்.
எல்லா கோபிகளுக்கும் விஷயம் புலப்பட்டது.


ஒருத்தி கத்தினாள்
ஏய்...
இது கண்ணனேதாண்டி...
அட ஆமாம்..
கண்ணன் கண்ணன் திருட்டுக்க் கண்ணனேதான்..


என்று ஒரே குரலில் கத்திக் கைதட்ட, கண்ணனுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.
ஒரே தாவலாய்த் தாவி அரண்மனக்குள் ஓடிவிட்டான் மூன்றாம் அகவை நிரம்பும் தருவாயிலிருந்த கண்ணன்.


விஷயம் என்னவென்றால், இவ்வளவு அலங்காரங்கள் செய்த யசோதை, கண்ணனுக்கு எதைப் போட்டுவிட வேண்டுமோ அதை மறந்துவிட்டாள்.


சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே..
என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்..


#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37