உறங்கும் முன் - 5

எப்போ வருவானோ?

காலையிலேயே பசும்பாலை
சுண்டக்காய்ச்சி, பாதாம், முந்திரி எல்லாம் அரைத்து விட்டு, ஏலக்காய் சேர்த்து முந்திரியை வறுத்துப் போட்டு, பாயசம் தயார் செய்தாள் பார்கவி.


மேலும் இன்று ரக்ஷா பந்தன் என்பதால், சாயங்காலமாவது பிறந்தகம் செல்ல வேண்டும். பக்கத்து கிராமம்தான். கண்ணன் வரும்போது வீட்டில் இருந்து அவன் சாப்பிடும் அழகை ரசித்துவிட்டுப் புறப்படலாம் என்று காத்திருந்தாள். தெரு முனையில் அவன் வந்தால் உள்ளே வந்து சொல்லும்படி குட்டிப் பெண் சந்திராவை வாசல் திண்ணையில் உட்கார்த்தி வைத்திருந்தாள்.


இன்று எல்லார் வீட்டிலும் விருந்துதான்.
அக்காரவடிசல், புளியோதரை, தேங்காய் சாதம், தயிர் சாதம், வடை, வடகம் என்று எல்லார் வீட்டிலும் அமர்க்களப்படும்.
நந்தபாலன் இன்று யார் வீட்டில் வேட்டைக்குச் சென்றானோ அவர்களது பாக்யமே பாக்யம்.

நேரம் போய்க்கொண்டே இருந்தது. கண்ணன் வருவதாய்க் காணோம்.
சந்திராவை அரண்மனைப் பக்கம் சென்று பார்த்துவிட்டு வரச் சொன்னால், அவளோ நான் இந்தப்பக்கம் போனால் அப்படி வந்துவிடுவானென்று போகமாட்டேன் என்கிறாள். அதுவும் உண்மைதான். அப்படிச் செய்யக்கூடியவன்தான் .

உச்சி வேளையானது. காலையிலேயே செய்த
பாயசம் நேரம் தாண்டினால் வீணாய்ப் போகுமே.
எல்லோருக்கும் பசி வந்துவிட்டது.
அக்கம் பக்கம் தெருக்களில் கூட அவன் வந்ததாய்த் தெரியவில்லை.‌
கண்ணனைப் பற்றி அவ்வப்போது சூடாகச் செய்தி சொல்லும் அந்த வாயாடி கல்யாணிக்கும் கூட அவன் எங்கு சென்றானெனத் தெரியவில்லை.

குழந்தை முகத்தில் பசி தெரிந்தது.
எப்போதும் நடப்பதுதானே.
எதிர்பார்த்தால் வரமாட்டான். திடீரென்று எதிரே வந்து குதிப்பான்.
அவ்வளவும் சமைத்துவிட்டு, உணவு வீணாய்ப் போகுமே.
கணவனுக்கு உணவு கொடுத்துவிட்டு, குழந்தைக்கும் போட்டு சாப்பிட்டு முடித்ததும் வந்தானே பார்க்கவேண்டும்.

மாமீ எங்கே என் பாயசம்?

இவ்ளோ நேரம் எங்கேயடா போனாய்?
காலையில் செய்தது.
வீணாகுமேன்னு இப்பத்தான் சாப்பிட்டோம்.
உனக்கு வேறு புதுசா பண்ணித் தரேன் கண்ணா...
கோவிச்சுக்காதேடா...

போங்க மாமி
எப்பவும் உங்களுக்கு இதே வேலை.
என்னைக் கூப்பிடவேண்டியது.
ஆனா நான் வர வரைக்கும் பொறுமை கிடையாது..
உங்க பாயசமும் வேணாம் ஒண்ணும் வேணாம். நல்லா இருக்கு உங்க உபசரிப்பும் லக்ஷணமும்.
சரி சரி.
என்னை பாயசம் தரேன்னு சொல்லி ஏமாத்தினதுக்கு தண்டனையா இந்த வெண்ணையை எடுத்துக்கறேன்.


என்று கூறிவிட்டு மூலையில் வைத்திருந்த இன்று கடைந்த புது வெண்ணெய்ப் பானையைத் தூக்கிக் கொண்டு ஓடினான்.


ஓடும்போது சும்மா போனானா, திரும்பிப் பார்த்து, இன்னொரு பானையைக் காட்டி, உங்க தாத்தா காலத்திலேர்ந்து இருக்கற இந்த ஊளை வெண்ணெய்ப் பானையை இன்னொரு தடவை பாத்தா உடைச்சுடுவேன். அப்றம் இங்க வரவும் மாட்டேன் என்று மிரட்டிவிட்டுப் போனான்.


இன்று கண்ணன் பாயசம் சாப்பிட வந்தானா என்று விசாரித்த ஸுதேவியிடம் எல்லாவற்றையும் சொன்ன சந்திரா,

இதில புரிஞ்சுக்க முடியாத விஷயம் என்னன்னா
காலைலேர்ந்து அவன் வரதுக்காக என்னைப் படாத பாடு படுத்தின என் அம்மா, இப்ப என்ன செய்வா தெரியுமா,
அரண்மனைக்குப் போய் யசோதாம்மா கிட்ட வெண்ணெய தூக்கிண்டு போய்ட்டான்னு புகாரும் செய்வாங்க...


வருவானா வருவானா ன்னு ஏங்கவும் செய்வாங்க
வந்தான் வந்தான்னு புகாரும் செய்வாங்க

என்றாள்.


அந்த மாயக் கண்ணனை எந்த வகையிலேனும் நினைக்காமலும், பேசாமலும்
கழியும் பொழுது வீணல்லவா?
பாடாத நாளெல்லாம் பாழே -முரளீதரனை....

Comments

Popular posts from this blog

உறங்கும் முன்... - 1

திருக்கண்ணன் அமுது - 1

ப்ருந்தாவனமே உன் மனமே - 37