உறங்கும் முன்.. - 2
எனக்குத் தெரியாமல் ஒளிப்பாயோ? விடியற்காலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்துவிட்டாள் அவள். பெரும்பாலும் கோகுலத்திலுள்ள அனைவருமே விடியலுக்கு முன் எழுந்துவிடுவர். எழுந்ததும் ஒரு எண்ணெய் விளக்கை எடுத்துக்கொண்டு நேராக மாட்டுத் தொழுவத்திற்கு வந்தாள். நாற்பதைம்பது மாடுகள் நிரம்பிய தொழுவம். ஒவ்வொன்றும் நன்றாக வளர்ந்து சித்தானைக்குட்டி போலிருக்கும். ஒவ்வொரு மாடாய்த் தடவி விட்டுக் கொண்டும், அவைகளோடு பேசிக்கொண்டும் கன்றுக்குட்டிகளை ஊட்டுவதற்காக அவிழ்த்துவிட்டாள். ஒரு காளைக்கன்று எப்போதும் துள்ளிக்கொண்டே இருக்கும். கண்ணன் பிறந்த அன்று அதுவும் பிறந்தது. அவன் நினைவாக அதற்கும் கான்ஹா என்று பெயர். அதன் அம்மா மாடு வரலக்ஷ்மி. அதன் பாலைக் கண்ணன் மிகவும் விரும்பிக் குடிப்பான். சமயத்தில் கான்ஹாவும் அந்தக் கருப்பனும் சேர்ந்து வரலக்ஷ்மியிடம் ஊட்டுவதை அவளே நேரில் கண்டிருக்கிறாள். கண்ணன் அவளிடம் ஊட்டிவிட்டுப் போனால் அந்த வரலக்ஷ்மி மகிழ்ச்சி மிகுதியால் இரு மடங்கு பால் கொடுப்பாள். சமயத்தில் வரலக்ஷ்மி கண்ணனுக்கு ஊட்டினாளா அல்லது அவன் இவளுக்கு செலுத்தினானா என்று சந்தேகம் வருமளவிற்கு பாலைக் கொட்டித் தீர்த்துவிடுவாள். அந...